மூளைச்சாவு அடைந்தவருக்கு பன்றியின் சிறுநீரகம்! அமெரிக்க அறுவை சிகிச்சை நிபுணர்கள் சாதனை
பர்மிங்ஹாம் நகரில் உள்ள அலபாமா மாகாண பல்கலைக்கழகத்தில் மூளைச்சாவு அடைந்து தானமாக பெறப்பட்ட ஒருவரது உடலில், மரபணு மாற்றியமைக்கப்பட்ட பன்றியின் சிறுநீரகங்களை பொருத்தி சோதனையை ஒன்றை மேற்கொண்டுள்ளனர். இச்சோதனை வெற்றிகரமாக முடிந்துள்ளது.
கடந்த ஆண்டு செப்டம்பரில் 57 வயதான ஜிம் பார்சன்ஸ் என்ற நபர் பைக் விபத்தில் அடிபட்டு மூளைச்சாவு அடைந்துள்ளார்.
இந்நிலையில் பார்சன்ஸ் குடும்பத்தினர் அனுமதியோடு மருத்துவர்கள் அவரது சிறுநீரகங்களை எடுத்துவிட்டு, மரபணு மாற்றப்பட்ட பன்றியின் இரண்டு சிறுநீரகங்கள் அவரது உடலில் பொறுத்தியுள்ளனர்.
அவ்வாறு அறுவை சிகிச்சை செய்து பொருத்தப்பட்ட பன்றியின் சிறுநீரகங்கள் அவரது உடலில் சிகிச்சை நிறைவடைந்த உடனேயே செயல்படத் தொடங்கி இருக்கிறது.
இதுபற்றி அந்தப் பல்கலைக்கழகத்தின் டாக்டர் ஜெய்மே லாக் கூறும்போது, "உறுப்பு மாற்று அறுவை சிகிச்சைகளுக்கு உறுப்பு பற்றாக்குறை உண்மையில் ஒரு தீர்க்கப்படாத நெருக்கடியாக உள்ளது. இதற்கு உண்மையான தீர்வு நம்மிடம் ஒருபோதும் இல்லை. இந்த நிலையில் தான் இத்தகைய சோதனை முயற்சிகளை தொடங்கி இருக்கிறோம்” என குறிப்பிட்டுள்ளார்.
மேலும் உறுப்புகள் தானம் பற்றக்குறையாக இருக்கும் பட்சத்தில் பன்றியிலிருந்து மனிதர்களுக்கு உறுப்பு பொறுத்தப்படுவது சிறப்பானதாக உள்ளது என்று மருத்துவர்கள் கருதுகின்றனர்.