தாய்ப் பாலில் பிளாஸ்டிக் கூறுகள்! ஆராச்சியாளர்கள் பகீர் தகவல்
தாய்ப் பாலில் மைக்ரோ-பிளாஸ்டிக் கூறுகள் இருப்பதாக இத்தாலிய மருத்துவ ஆராய்ச்சியாளர்கள் குழு அஞ்சுகிறது. தாயின் பாலில் பிளாஸ்டிக் நச்சுகள் இருப்பது இதுவே முதல் முறை என்றும் கூறப்படுகிறது.
34 தாய்மார்களில் பரிசோதனை
இத்தாலியில் உள்ள 34 ஆரோக்கியமான தாய்மார்களிடமிருந்து எடுக்கப்பட்ட தாய்ப்பாலின் மாதிரிகளை ஆய்வு செய்தபோது இத்தாலிய ஆராய்ச்சியாளர்கள் இதைக் கண்டுபிடித்துள்ளனர்.
இந்த ஆராய்ச்சிக்கு தேர்ந்தெடுக்கப்பட்ட 34 தாய்மார்களும் ஒரு வாரத்திற்கு முன் குழந்தை பெற்றவர்கள் என இத்தாலிய மருத்துவ ஆராய்ச்சியாளர்கள் விளக்கமளிக்கின்றனர்.
“உயிரினங்களின் உடலில் பிளாஸ்டிக் விஷம் இருப்பது ஒரு பயங்கரமான சூழ்நிலை. அவை செல்களை பாதிக்கின்றன. புற்றுநோயை உண்டாக்கும். தாயின் பாலில் பிளாஸ்டிக் விஷம் கலந்திருப்பது ஒரு பயங்கரமான நிலை என்பதைச் சொல்லத் தேவையில்லை” என ஆய்வில் ஈடுபட்டுள்ள இத்தாலிய விஞ்ஞானிகள் விளக்கமளித்துள்ளனர்.
மைக்ரோ-பிளாஸ்டிக் என்பது 5 மிமீக்கும் குறைவான நீளமுள்ள பிளாஸ்டிக் துகள்கள் ஆகும். இவை தற்போது பிளாஸ்டிக் விஷங்கள் சுற்றுச்சூழலை மாசுபடுத்தி விட்டன. மைக்ரோ-பிளாஸ்டிக் கூறுகள் முதலில் கடல் உயிரினங்களில் கண்டுபிடிக்கப்பட்ட நிலையில் பிளாஸ்டிக் கழிவுகள் கடலில் அடிக்கடி கொட்டப்படுவதே இதற்குக் காரணம் என கூறப்பட்டிருந்தது.
அதன் பின்னர் விஞ்ஞானிகள் நிலத்தில் வாழும் உயிரினங்களின் உடலில் மைக்ரோ-பிளாஸ்டிக் கூறுகளை கண்டுபிடித்தனர்.
இந்த நிலையில் தற்போது தாய்ப் பாலில் பிளாஸ்டிக் நச்சுகள் உள்ளமை கண்டறியப்பட்டுள்ளமை அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.