சீன ஜனாதிபதியைச் சந்திக்கும் கனேடியப் பிரதமர்
ஆசிய-பசிபிக் பொருளாதார ஒத்துழைப்பு உச்சிமாநாடு ஆரம்பமாகியுள்ள நிலையில், கனேடியப் பிரதமர் மார்க் கார்னி செவ்வாய்க்கிழமை காலை சீன ஜனாதிபதி ஜி ஜின்பிங்கை நேரில் சந்திக்கவுள்ளார்.
இரு நாடுகளுக்கும் இடையிலான வர்த்தகம், எரிசக்தி மற்றும் முதலீட்டு வாய்ப்புகளை விரிவுபடுத்துவது குறித்து இந்த உயர்மட்டப் பேச்சுவார்த்தையில் முக்கிய கவனம் செலுத்தப்படவுள்ளது.
அமெரிக்கா மீதான பொருளாதாரச் சார்பைக் குறைத்து, கனடாவின் வர்த்தகத் தொடர்புகளைப் பன்முகப்படுத்தும் வியூகத்தின் ஒரு முக்கிய கட்டமாகப் பிரதமர் கார்னியின் இந்தச் சந்திப்பு பார்க்கப்படுகிறது.

கடந்த 2026 ஜனவரி மாதம் பிரதமர் கார்னி பெய்ஜிங்கிற்கு மேற்கொண்ட உத்தியோகபூர்வ விஜயத்தைத் தொடர்ந்து, இரு நாடுகளுக்கும் இடையே வர்த்தக உறவுகள் குறிப்பிடத்தக்க அளவில் முன்னேற்றம் கண்டுள்ளன.
2026 ஆம் ஆண்டின் முதல் பாதியில் சீனாவிற்கான கனடாவின் பொருள் ஏற்றுமதி 31.4 சதவீதம் அதிகரித்து 21.5 பில்லியன் டொலர்களை எட்டியுள்ளது.
அத்துடன், கச்சா எண்ணெய் ஏற்றுமதியும் சுமார் 37 சதவீதம் உயர்ந்துள்ளது. ஜனவரி சந்திப்பின் பின்னர், கனேடிய கனோலா விதைகள் மீதான வரியை 85 சதவீதத்திலிருந்து 14.9 சதவீதமாகச் சீனா குறைத்ததுடன், கனோலா புண்ணாக்கு, பட்டாணி, லொப்ஸ்டர் மற்றும் நண்டு ஆகியவற்றின் மீதான மேலதிக வரிகளையும் இடைநிறுத்தியது. இந்தச் சலுகைகளை 2028 ஆம் ஆண்டு இறுதி வரை நீடிக்க இரு நாடுகளும் நவம்பர் 4 ஆம் திகதி இணக்கம் கண்டுள்ளன.
மேலும், 20 பதிவுசெய்யப்பட்ட நிலையங்களிலிருந்து கனேடிய மாட்டிறைச்சி இறக்குமதிக்கும் சீனா மீண்டும் அனுமதி வழங்கியுள்ளது.
தற்போது நடைபெறவுள்ள சந்திப்பில், கனேடிய கனோலா எண்ணெய் மீது சீனா விதித்துள்ள 100 சதவீத மேலதிக வரியையும், பன்றி இறைச்சி மீதான 25 சதவீத வரியையும் குறைப்பதற்கான அல்லது நீக்குவதற்கான சலுகைகளைப் பெறுவதே பிரதமர் கார்னியின் பிரதான இலக்காக உள்ளது.
அத்துடன், அமெரிக்க வரிகளால் பாதிக்கப்பட்டுள்ள கனேடிய வாகனத் துறை ஊழியர்களுக்குப் புதிய வேலைவாய்ப்புகளை உருவாக்கும் வகையில், சீன வாகன உற்பத்தியாளர்கள் கனடாவில் நேரடி உற்பத்தித் தொழிற்சாலைகளில் முதலீடு செய்ய வேண்டும் எனவும் கார்னி அழைப்பு விடுத்துள்ளார்.