போலந்து பிரதமர் டொனால்ட் டஸ்க் மீது தாக்குதல் நடத்தத் திட்டம்: சந்தேக நபர் கைது!
போலந்து பிரதமர் டொனால்ட் டஸ்க் மற்றும் நாட்டின் பாதுகாப்புத் துறை அமைச்சர் வ்வாடிஸ்லாவ் கொசினியாக்-கமிஷ் ஆகியோருக்கு எதிராகத் தாக்குதல் நடத்தத் திட்டமிட்டதாகச் சந்தேகிக்கப்படும் நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
அந்நாட்டின் உள்துறை அமைச்சர் மார்சின் கீர்வின்ஸ்கி இந்த விடயத்தை தெரிவித்தார். தாக்குதல் மிரட்டல் விடுத்த நபர் உடனடியாகக் கைது செய்யப்பட்டுள்ளதாகப் பிரதமர் டொனால்ட் டஸ்க் தனது சமூக வலைத்தளப் பக்கத்தில் தெரிவித்து, காவல்துறையினரின் விரைவான நடவடிக்கைக்குப் பாராட்டுத் தெரிவித்துள்ளார்.
இந்தத் தாக்குதல் திட்டம் குறித்துத் தகவல்கள் கிடைத்ததை அடுத்து, பாதுகாப்புச் சேவைகள், காவல்துறை மற்றும் உள்துறை அமைச்சு அதிகாரிகளின் அவசரக் கூட்டம் ஞாயிற்றுக்கிழமை நடத்தப்பட்டது.

மிரட்டல் நிறைவேற்றப்பட அதிக வாய்ப்புள்ளதாக அதிகாரிகள் எச்சரித்துள்ளனர்.
உக்ரைன் மீதான போரில் மேற்கத்திய நாடுகளின் ஆதரவைக் குலைக்கும் வகையில் ரஷ்யா கலப்பினத் தாக்குதல்களை நடத்தக்கூடும் எனப் பிரதமர் டொனால்ட் டஸ்க் சமீபத்தில் எச்சரித்திருந்த நிலையில், தற்போது இந்தச் சம்பவம் நடந்துள்ளது.
போலந்தின் மசோவியா மாகாணத்தில் இந்த வாரம் நான்கு நாட்களுக்குள் மூன்று வெவ்வேறு பள்ளிகளில் நடத்தப்பட்ட கத்திக்குத்துத் தாக்குதல்களில் பலர் காயமடைந்ததுடன், ஒருவர உயிரிழந்ததும் குறிப்பிடத்தக்கது.
கைது செய்யப்பட்ட நபரின் அடையாளம் மற்றும் தாக்குதலின் தன்மை குறித்த கூடுதல் விவரங்கள் உடனடியாக வெளியிடப்படவில்லை; எனினும் இது குறித்துப் புலனாய்வுத் துறையினர் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.