17 நகரங்களில் வெடித்த போராட்டம்... நூற்றுக்கணக்கானோர் அதிரடி கைது
உக்ரைன் மீதான படையெடுப்புக்கு எதிர்ப்பு தெரிவித்து ரஷ்யாவின் 17 நகரங்களில் பொதுமக்கள திரண்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.
குறித்த ஆர்ப்பாட்டங்களில் மொத்தம் 204 பேர்கள் பொலிசாரால் கைதாகியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. தலைநகர் மாஸ்கோவில் மட்டும் பெருந்திரள் ஆர்ப்பாட்டங்கள் முன்னெடுக்கப்பட்டதாகவும், 73 பேர்கள் கைதாகியுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
உக்ரைன் மீதான போருக்கு பின்னர் ரஷ்யாவிலும் கடும் நெருக்கடி ஏற்பட்டுள்ளதாகவே தகவல் வெளியாகியுள்ளது. மட்டுமின்றி, ஆர்ப்பாட்டம் தொடர்பில் செய்தி சேகரித்து வந்த ஊடகவியலாளர் ஒருவரை பொலிசார் கைது செய்துள்ளதுடன், சட்டத்தரணியை சந்திக்கவும் அவரை அனுமதிக்கவில்லை என கூறப்படுகிறது.
மேலும், செயின்ட் பீட்டர்ஸ்பர்க் சட்டமன்றத்திற்கு செல்ல பாலத்தில் கூடியிருந்த போராட்டக்காரர்களை பொலிசார் அனுமதிக்கவில்லை எனவும் கூறப்படுகிறது.
நாட்டின் பல நகரங்களில் பொதுமக்கள் திரண்டு உக்ரைனுக்கு ஆதரவாக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். மட்டுமின்றி, ஆக்கிரமிக்கப்பட்ட நகரத்தில் உக்ரைன் ஆதரவு பேரணியின் போது ரஷ்ய துருப்புக்கள் தேசிய கீதம் பாடிய பொதுமக்களை வன்முறையில் கலைத்ததாக உள்ளூர் அதிகாரிகள் தெரிவித்தனர்.
இதனிடையே, சனிக்கிழமையன்று நகரத்தின் மற்றொரு பகுதி மீது ரஷ்யப் படைகள் ஷெல் தாக்குதல் நடத்தியதாகவும், இதன் விளைவாக நான்கு பேர் காயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.