கனடவில் துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்த ஆண்களின் விபரங்கள் வெளியிடப்பட்டுள்ளன
கனடாவின் வோன் நகரில் புதன்கிழமை இரவு வீடு ஒன்றிற்கு வெளியே சுட்டுக்கொல்லப்பட்ட இரண்டு நபர்களின் விபரங்களை யோர்க் பிராந்திய பொலிஸார் தற்போது வெளியிட்டுள்ளனர்.
கடந்த புதன்கிழமை மாலை 5:30 மணியளவில், கைசர் (Kaiser) மற்றும் ஃபாரஸ்ட் டிரைவ்ஸ் (Forest drives) சந்திப்பிற்கு அருகிலுள்ள ஒரு வீட்டிற்கு வெளியே நின்று கொண்டிருந்தபோது துப்பாக்கியால் சுடப்பட்டதில் இரண்டு பேர் கொல்லப்பட்டனர்.
இதில் பாஸ்குவேல் காஸ்சியாட்டோ (Pasquale Casciato - 49 வயது), கிறிஸ்டியன் பெல்சிட்டோ (Christian Belsito - 34 வயது) ஆகிய இருவரும் உயிரிழந்தனர்.

இந்தத் துப்பாக்கிச் சூடு திட்டமிடப்பட்டு நடத்தப்பட்ட ஒரு இலக்கு வைக்கப்பட்ட தாக்குதல் என நம்புவதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
உயிரிழந்தவர்களில் ஒருவர் அந்த வீட்டிலேயே வசிப்பவர் என்றும், மற்றொருவர் அதே சுற்றுவட்டாரப் பகுதியைச் சேர்ந்தவர் என்றும் விசாரணையில் உறுதி செய்யப்பட்டுள்ளது.
சம்பவம் நடந்த இடத்திலிருந்து சுமார் 12 கிலோமீட்டர் தொலைவில் உள்ள ஹண்டிங்டன் மற்றும் கிர்பி சாலைகள் பகுதியில் தீப்பற்றி எரிந்த நிலையில் ஒரு SUV ரக வாகனம் கண்டெடுக்கப்பட்டது.
இந்த வாகனத் தீ விபத்திற்கும், துப்பாக்கிச் சூட்டிற்கும் தொடர்பு இருக்கிறதா என்பது குறித்து பொலிஸார் தீவிரமாக ஆராய்ந்து வருகின்றனர்.
சந்தேக நபர்கள் குறித்த விபரங்களை பொலிஸார் இன்னும் வெளியிடவில்லை. எனினும், இந்தச் சம்பவம் தொடர்பாக ஏதேனும் தகவல் தெரிந்தவர்கள் அல்லது அந்த நேரத்தில் அப்பகுதியில் பயணித்த வாகன சாரதிகள் உடனடியாக முன்வந்து தகவல் அளிக்குமாறு பொலிஸார் கோரிக்கை விடுத்துள்ளனர்.