கனடாவில் இடம்பெறும் மோசடிகள் தொடர்பில் போலீசார் எச்சரிக்கை ,
கனடாவின் ஹால்டன் பகுதியில் மோசடி சம்பவங்கள் தொடர்பில் போலீசார் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
அண்மை காலமாக குறித்த பகுதியில் மோசடி சம்பவங்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக போலீசார் சுட்டிக்காட்டி உள்ளனர்.
குறிப்பாக திட்டமிட்ட அடிப்படையில் முதியவர்களிடம் மோசடி செய்யும் செயற்பாடுகள் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
பேரப்பிள்ளைகளுக்கு ஆபத்து என முதியவர்களிடம் கூறி அவர்களிடம் இருந்து பணம் பறிக்கும் ஓர் நடவடிக்கை அதிக அளவில் இடம்பெற்று வருவதாக தெரிவிக்கப்படுகிறது.
பேரப்பிள்ளைகள் விபத்திற்குள்ளானார்கள் எனவும் பேரப்பிள்ளைகள் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர் எனவும் கூறி அவர்களை காப்பாற்றுவதற்காக பணம் கோரும் நடவடிக்கைகள் இடம்பெற்று வருவதாக தெரிவிக்கப்படுகிறது.
தொலைபேசி அழைப்புகள்
உறவினர்களைப் போலவும் போலீஸ் உத்தியோகத்தர்களை போலவும் தொலைபேசி அழைப்புகளை மேற்கொண்டு மக்களிடமிருந்து பணம் மோசடி செய்யப்பட்டு வருவதாக போலீசார் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
மோசடி செய்பவருக்கு பணம் கொடுக்கும் வரையில் அந்த அழைப்பு போலியானதா என்பதனை பலர் கவனத்திற்கு கொள்வதில்லை என போலீசார் தெரிவித்துள்ளனர்.
எனவே வயது முதிர்ந்தவர்கள் இவ்வாறான மோசடி தொலைபேசி அழைப்புகள் குறித்து கூடுதல் அவதானத்துடன் இருக்க வேண்டும் என போலீசார் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.