றொரன்டோ இரவு நேர கேளிக்கை விடுதியில் அதிகாலை இடம்பெற்ற கொடூரம்
றொரன்டோவின் கிங் வெஸ்ட் இரவு நேர கேளிக்கை விடுதியில் இன்று அதிகாலை இடம்பெற்ற கொடூர சம்பவத்தில் இரண்டு பேர் படுகாயமடைந்துள்ளனர்.
அதிகாலை 3.30 மணியளவில் கேளிக்கை விடுதிக்குள் துப்பாக்கிச் சூடு நடாத்தப்பட்டுள்ளது. இந்த துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில் 20 முதல் 30 வயது மதிக்கத்தக்க ஆண் ஒருவரும் பெண் ஒருவரும் காயமடைந்துள்ளனர்.
படுகாயமடைந்த ஆணின் நிலை பாரதூரமாக காணப்படுவதாக வைத்தியசாலை வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
படுகாயமடைந்த பெண்ணுக்கு உயிர் ஆபத்து கிடையாது என தெரிவிக்கப்படுகின்றது.
இந்த சம்பவத்தில் மற்றுமொருவரும் காயமடைந்திருக்கலாம் என பொலிஸார் சந்தேகம் வெளியிட்டுள்ளனர்.
துப்பாக்கிச் சூடு நடாத்தியவர் ஓர் கறுப்பின ஆண் என்பது மட்டுமே தற்போதைக்கு கிடைக்கப் பெற்றுள்ள தகவல் எனவும், விசாரணைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
றொரன்டோவின் கிங் மற்றும் பாதுரஸ்ட் வீதிகளுக்கு அருகாமையில் இந்த கிங் வெஸ்ட் இரவு நேர கேளிக்கை விடுதி அமைந்துள்ளது.
என்ன காரணத்திற்காக இந்த துப்பாக்கிச் சூட்டு சம்பவம் இடம்பெற்றது என்பது பற்றிய விபரங்கள் எதுவும் இதுவரையில் வெளியிடப்படவில்லை.