மொன்றியலில் ரயில் மோதி 30 வயது ஊழியர் பலி: காவல்துறை விசாரணை
கனடாவின் மொன்றியல் நகரில் தண்டவாளத்தில் ரயில் மோதியதில் 30 வயதுடைய ரயில்வே ஊழியர் ஒருவர் உயிரிழந்துள்ளதாகக் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
நகரின் வில்லே-மேரி பகுதியில், ஜாக்-கார்ட்டியர் பாலத்திற்கு அருகில் உள்ள டு லோரிமியர் அவென்யூ மற்றும் நோட்ரே-டேம் தெரு சந்திப்பில் இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது.
தண்டவாளத்தில் ஊழியர் பணியில் இருந்தபோது ரயில் நகரத் தொடங்கியதே விபத்திற்குக் காரணம் என ஆரம்பகட்ட விசாரணையில் தெரியவந்துள்ளதாக மொன்றியல் காவல்துறை செய்தி தொடர்பாளர் மானுவல் குடூர் தெரிவித்துள்ளார்.

உயிரிழந்தவர் 'கனடியன் பசிபிக் கேன்சஸ் சிட்டி' நிறுவனத்தில் மொன்றியல் துறைமுகப் பகுதியில் பணியாற்றிக் கொண்டிருந்த 30 வயதுடைய ஊழியர் ஆவார்.
பாதிக்கப்பட்டவரின் குடும்பத்திற்கும் சக ஊழியர்களுக்கும் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறோம். இத்துயரமான சூழலில் அவர்களுக்கு ஆதரவாக நிற்பதே எங்களின் முதன்மை இலக்கு. ரயில்வே ஊழியர்களின் பாதுகாப்பே எங்களின் உயரிய முன்னுரிமை" என கனடியன் பசிபிக் கேன்சஸ் சிட்டி நிறுவனம் தெரிவித்துள்ளது. நேற்று இரவு பணிக்குச் சென்ற ரயில்வே ஊழியர் மீண்டும் வீடு திரும்பவில்லை.
இன்று இதைவிட வேறு எதுவும் முக்கியமில்லை. விசாரணை தீவிரமடையும் போது, அரசு மற்றும் ரயில்வே நிர்வாகத்திடமிருந்து முறையான பதில்களைப் பெற அழுத்தம் கொடுப்போம் என டீம்ஸ்டர்ஸ் கனடா தொழிற்சங்கத் தலைவர்கள் பிரான்சுவா லாபோர்ட் மற்றும் போல் புஷே தெரிவித்துள்ளனர்.
விபத்துக்கான துல்லியமான காரணத்தைக் கண்டறிய மொன்றியல் காவல்துறையின் தெற்குப் பிரிவும், குற்றவியல் தொழில்நுட்பக் குழுவினரும் களத்தில் ஆய்வு செய்து வருகின்றனர்.