கனடா-அமெரிக்க எல்லை அருகே ஆவணமில்லா குடியேறிகளின் வாகனம் விபத்து
கனடா-அமெரிக்க எல்லை அருகே ஆவணமில்லா குடியேறிகள் பயணம் செய்த வாகனமொன்று விபத்துக்குள்ளாகியுள்ளது.
இந்த வாகன விபத்திற்கு பின்னர் சட்டவிரோதமாக குடியேற முயன்றவர்களை கியூபெக் மாகாண போலீசார் தேடி வருகின்றனர்.
ஞாயிற்றுக்கிழமை அதிகாலை 4:15 மணியளவில், ஹெம்மிங்ஃபோர்டு (Hemmingford), க்யூபெக்கின் ரூட் 202 மற்றும் மொன்டீ ஜாக்சன் சாலைகளின் சந்திப்பில் இந்த விபத்து நடந்ததாக போலீசார் தெரிவித்தனர்.
இது நியூயார்க் மாநில எல்லையிலிருந்து வெறும் சில கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ளது.
ஒரே வாகனத்தில் பயணம் செய்த 10 முதல் 12 ஆவணமில்லாத குடியேறிகள், வேறு ஒரு SUV வாகனத்துடன் மோதியபோது, அவர்கள் வந்த வாகனம் குடைசாய்ந்துள்ளது.
வாகனத்தில் பயணம் செய்த முழுமையான எண்ணிக்கை இன்னும் உறுதியாகவில்லை. 6 முதல் 8 பேர் தப்பி ஓடிவிட்டதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
இன்னொரு SUV-வில் பயணித்த 48 வயதுடைய அமெரிக்கக் குடிமகன் மதுபோதையில் வாகனம் ஓட்டியதாகக் கூறப்படுகிறது. அவரை கைது செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
அந்த வாகனத்தில் குறைந்தது ஒரு பயணி இருந்ததாகவும் கூறப்பட்டுள்ளது.
விபத்தில் நான்கு பேர் காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். அவர்களின் நிலை அபாயமில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.