கனடாவில் போலி துப்பாக்கிப் பயன்படுத்தி மிரட்டிய இளைஞர் கைது
ஒரு பிளாஸ்டிக் பாட்டிலிலிருந்து வெட்டிய பொம்மை துப்பாக்கியை வைத்துக்கொண்டு எரிவாயு நிலையப் பணியாளர்களை மிரட்டியதாக கூறப்படும் 27 வயதான இளைஞர் மீது கிங்ஸ்டன் போலீசார் பல்வேறு குற்றச்சாட்டுகளை பதிவு செய்துள்ளனர்.
செவ்வாய்க்கிழமை மாலை 8:30 மணியளவில், கொன்செசன் வீதி Concession Street மற்றும் பாத் வீதி Bath Road அருகிலுள்ள ஒரு எரிவாயு நிலையத்திற்கு வந்த சந்தேகத்துக்குரிய நபர், வெள்ளை நிறத் துப்பாக்கியைப் போன்று தோன்றிய ஒரு பொருளை வைத்திருந்ததாகக் காவல்துறை தெரிவித்துள்ளது.
குறித்த நபர், எரிபொருள் நிலையத்தை நோக்கிச்சென்று துப்பாக்கியை காண்பித்து பணியாளர்களை மிரட்டியதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு வரும்போது சந்தேக நபர் தப்பிச் சென்றிருந்தார்.
எனினும், அருகிலுள்ள பகுதியில் குறுகிய நேரத்திலேயே அவரை கண்டுபிடித்து பொம்மை துப்பாக்கி போன்ற பொருளை கைப்பற்றியுள்ளனர்.
கைது செய்யும் போது சந்தேக நபர் காவல்துறையினருடன் மோத முயற்சித்தார் என தெரிவிக்கப்படுகின்றது.
மேலும், அந்த நபர் ஒரு நிபந்தனையுடன் பிணையின் கீழ் இருந்தவர் என்பது விசாரணையில் தெரியவந்துள்ளது.
அதில், போலி துப்பாக்கிகளை வைத்திருக்கும் உரிமை இல்லை என்பதும் உள்ளடங்கியுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.