முல்லைத்தீவுக்கு செல்லத் தயாரான 3 பேருந்துகள் பறிமுதல்! 25 பேரிடம் வாக்குமூலம் பதிவு
இலங்கையில் தேர்தல் சட்டத்தை மீறி, முல்லைத்தீவுக்கு நுரைச்சோலையில் இருந்து வாக்காளர்களை ஏற்றிச் செல்வதற்காக தயாராக இருந்த 3 தனியார் பேருந்துகளை பொலிஸாரால் பறிமுதல் செய்துள்ளதாக தெரிவித்துள்ளனர்.
1981 ஆம் ஆண்டின் 01 ஆம் இலக்க நாடாளுமன்ற தேர்தல்கள் சட்டத்தின் 83 (1)ஆ பிரிவின் படி, இந்த நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளதாக புத்தளம் பொலிஸ் அத்தியட்சகர் உதயகுமார இன்று குறிப்பிட்டுள்ளார்.
வாக்களிப்பதற்காக, வாக்காளர்களுக்கு பணம் கொடுத்து, அவர்களை முல்லைத்தீவுக்கு அழைத்துச் செல்வதற்காக 3 பேருந்து தயாராக இருப்பதாக நுரைச்சோலை பொலிஸாருக்கு கிடைத்த தகவல் ஒன்றின் அடிப்படையில் இந்த நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டதாகவும் அவர் கூறினார்.
இதன்போது குறித்த 3 பேருந்துகளும் பொலிஸ் பொறுப்பில் வைக்கப்பட்டுள்ளது.
அந்த பேருந்துகளில் சாரதிகள் மற்றும் நடத்துனர்களும், அதில் பயணிக்க தயாராக இருந்த பொதுமக்கள் என 25 பேரிடம் இதுவரை வாக்குமூலம் பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.
மக்களிடம் பெறப்பட்ட வாக்குமூலத்தினை அடிப்படையாக வைத்து, மேலதிக நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படும் எனவும் அவர் சொன்னார்.
இந்த சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை நுரைச்சோலை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.