கனடாவில் வாகனம் வைத்திருப்போருக்கான எச்சரிக்கை
ஒன்டாரியோ மாகாணத்தின் பாரி நகரில் உள்ள றோயல் விக்டோரியா மருத்துவமனை வாகன நிறுத்துமிடத்தில் இரண்டு வாகனங்களில் GPS கண்காணிப்பு சாதனங்கள் (tracking devices) கண்டுபிடிக்கப்பட்டதைத் தொடர்ந்து, பாரி காவல்துறை பொதுமக்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளது.
சம்பந்தப்பட்ட வாகன உரிமையாளர்கள் தங்களது செல்போன்களில் வந்த எச்சரிக்கை அறிவிப்பின் மூலம் டிராக்கர் சாதனங்கள் அருகில் இருப்பதை அறிந்துள்ளனர் என பாரி பொலிஸ் பிரிவின் சமூக பாதுகாப்பு மற்றும் நலத்துறை அதிகாரியான கிரிஸ்டைன் போஹ்லர் தெரிவித்துள்ளார்.
“வாகனத்தை இயக்கிக் கொண்டிருந்தபோது, ஒரு கண்காணிப்பு சாதனம் மிகவும் அருகில் உள்ளது என அவர்களுக்கு செல்போன் மூலம் எச்சரிக்கை வந்துள்ளது.

பின்னர் விரிவாகச் சோதித்தபோது, வாகனத்தில் டிராக்கர் பொருத்தப்பட்டிருப்பதை கண்டுபிடித்தனர்,” என போஹ்லர் கூறினார்.
வாகனங்களில் டிராக்கர்கள் அடிக்கடி கண்டுபிடிக்கப்படாதபோதிலும், அவற்றை மறைத்து பொருத்துவது கடினமல்ல என Active Green + Ross நிறுவனத்தின் வாகன தொழில்நுட்ப நிபுணர் ஸ்டீவ் மேடர் தெரிவித்துள்ளார்.
“வாகனத்தின் முன் அல்லது பின்புற சக்கர வளைவுகள் (wheel wells) அருகில் பொருத்தலாம். குறிப்பாக பின்புறத்தில், ஸ்பேர் டயர் பகுதி முழுவதும் உலோகத்தால் ஆனது. காந்தம் மூலம் பொருத்தப்படும் சாதனங்களை அங்கு எளிதில் மறைக்கலாம்,” என குறிப்பிட்டுள்ளார்.
திருடர்கள் புதிய மாடல் வாகனங்களை குறிவைத்து வருகின்றனர். குறிப்பாக நீண்ட நேரம் நிறுத்தப்படும் வாகனங்களில், முன் கண்ணாடி அருகிலுள்ள ஹூட் பகுதியில் டிராக்கர்கள் பொருத்தப்படுகின்றன.
“இரண்டு வாகனங்களும் டொயோட்டா (Toyota) மாடல்கள். கடந்த டிசம்பரில் மட்டும் 20-க்கும் மேற்பட்ட வாகனங்கள் திருடப்பட்டன.
புதிய வகை வாகனங்களே அதிகமாக குறிவைக்கப்படுகின்றன,” என போஹ்லர் தெரிவித்தார். வாகனங்களை நீண்ட காலம் பயன்படுத்தாமல் வைத்திருக்கும்போது, அவற்றை கராஜில் பாதுகாப்பாக நிறுத்துமாறு பொலிஸார் அறிவுறுத்தியுள்ளனர்.
வெளியே செல்லும்போது கடைகளுக்கு அருகில் வாகனங்களை நிறுத்துமாறு கோரப்பட்டுள்ளது.
இந்த சம்பவம் RVH வாகன நிறுத்துமிடத்தில் நடந்திருந்தாலும், டிராக்கர் சாதனங்கள் நகரம் முழுவதும் மற்றும் மாகாணத்தின் பல பகுதிகளில் கண்டுபிடிக்கப்பட்டுவருவதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.