கனடாவில் பிற்போடப்பட்ட பொங்குதமிழ் நிகழ்வு
கனடாவில் தமிழர்கள் அனைவரும் ஒன்றுகூடி நடத்தும் பொங்குதமிழ் நிகழ்வு பிற்போடப்பட்டுள்ளதாக கனடியத் தமிழர் சமூகம் மற்றும் கனடியத் தமிழ் மாணவர் சமூகமும் குறித்த தகவலை வெளியிட்டுள்ளது.
இவ்விடயம் தொடர்பில் மேலும் குறிப்பிட்டுள்ளதாவது,
கனடாத் தமிழர் நாம் அனைவரும் ஒன்றுகூடி செப்ரெம்பர் மாதம் முதலாம் நாள் பேரெழுச்சியோடு பொங்குதமிழ் நிகழ்வை நடத்த இருந்ததை நீங்கள் அனைவரும் அறிவீர்கள்.
பொங்குதமிழ் நிகழ்வு Morningside - Finch சந்திப்புக்கு அருகாமையில் உள்ள திடலில் நடைபெறுவதாக முடிவு செய்யப்பட்டிருந்தது.
இவ்விடத்தை ஓர் ஊடக நிறுவனத்தினர் குத்தகைக்குப் பெற்றிருந்தனர். குறித்த நிறுவனத்திடமிருந்து நாம் அதைப் பெற்றிருந்தோம்.
இத்திட்டம் தொடர்பில் அந்த நிறுவனத்தோடு ஏற்பட்ட முரண்பாடுகள் காரணமாக அவ்விடத்தைக் கைவிடவேண்டிய நிலை எமக்கு ஏற்பட்டிருக்கிறது.
இந்நிகழ்வில் முன்னரங்கில் பங்குகொள்வோர் யாவரும் தூய சிந்தனையோடும் தேசியப்பற்றோடும் செயலாற்றவேண்டும். அதேவேளை இவ்விடயம் தொடர்பான உறுதித்தன்மை பற்றிய தெளிவைப் பெறுவதும் அவசியம். இவற்றை நோக்காகக் கொண்டு குறித்த ஊடக நிறுவனத்தோடு நாம் பேசினோம்.
பேசும்போது, “நீங்கள் இனவிரோதச் செயற்பாடுகளுக்குத் துணைபோகும் கனடியத் அமைப்பின் தெருநிகழ்வில் பங்குகொள்வதைத் தவிர்க்கவேண்டும்” எனக் கேட்டிருந்தோம்.
குறித்த ஊடக நிறுவனத்துக்கும் அவ்வமைப்புக்குமான தொடர்பைப் பயன்படுத்தி இலங்கை அரசு பொங்குதமிழுக்கு இறுதிநேரத்தில் இடையூறுகளை ஏற்படுத்தலாம் என்ற அச்சமும் எமக்கு இருந்தது.
எமது கோரிக்கையை குறித்த ஊடக நிறுவனம் ஏற்றுக்கொண்டதை அடுத்து, நாம் அவ்விடத்தில் பொங்குதமிழ் நிகழ்வுக்கான ஏற்பாடுகளைத் தொடங்கினோம். ஆனால் அந்நிறுவனம் இலங்கை அரசுக்குத் துணைபோகும் அமைப்பின் தெருநிகழ்வில் ஒலி,ஒளி மற்றும் மேடை அமைப்பில் பங்காற்ற இருப்பதை அறிந்து அதிர்ச்சி அடைந்தோம்.
இரட்டைமுகம் கொண்ட குறித்த நிறுவனத்தின் குத்தகை நிலத்தில் பொங்குதமிழ் நிகழ்வு செய்வது எவ்வவையிலும் பொருத்தமாக அமையாது எனக் கருதிய நாம் அவ்விடத்தில் இருந்து விலகுவதென உறுதியாக முடிவெடுத்தோம்.
மிகவிரைவில் மற்றுமொரு நாளில் புதிய இடத்தில் பொங்குதமிழ் நிகழ்வு உங்கள் பேராதரவோடு நடைபெறும். அந்த விபரங்களை விரைவில் அறியத் தருவோம் என கனடியத் தமிழர் சமூகம் மற்றும் கனடியத் தமிழ் மாணவர் சமூகமும் இத் தகவலை தெரிவித்துள்ளது.