விளாடிமிர் புடினுக்கு மீண்டும் கோரிக்கை வைத்த போப் பிரான்சிஸ்
உக்ரைன் மீதான படையெடுப்பை உடனடியாக நிறுத்துமாறு ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடினுக்கு போப் பிரான்சிஸ் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
உக்ரைன் மீதான ரஷ்ய போர் தொடர்ந்து நீடித்துவரும் நிலையில், கைப்பற்றப்பட்ட 4 நகரங்களை தங்கள் நாட்டுடன் இணைத்துக்கொண்டதாக ரஷ்ய ஜனாதிபதி புடின் கடந்த வாரம் அறிவித்தார்.
இதற்கிடையில், ரஷ்யப் படைகளால் ஒவ்வொரு நாளும் உக்ரைனியர்கள் கொல்லப்படுவதாக அந்த நாட்டின் ஜனாதிபதி ஜெலன்ஸ்கி கடுமையாக குற்றம் சுமத்தி வருகிறார். இந்த நிலையில் போரை நிறுத்துமாறு கிறிஸ்தவ மதத்தலைவர் போப் பிரான்சிஸ் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
உக்ரைன் போர், மிகவும் தீவிரமானதாகவும், பேரழிவு தரக்கூடியதாகவும், பெரும் கவலையை ஏற்படுத்தும் அளவுக்கு அச்சுறுத்தலாகவும் மாறியுள்ளது என குறிப்பிட்டுள்ள போப் பிரான்சிஸ்,
கடவுளின் பெயராலும், ஒவ்வொரு இதயத்திலும் குடிகொண்டிருக்கும் மனிதாபிமானத்தின் பெயராலும், உடனடி போர் நிறுத்தம் செய்யுமாறு நான் அழைப்பு விடுக்கிறேன் என்றார்.
மட்டுமின்றி, தொடரும் வன்முறை மற்றும் மரணத்தை தடுத்து நிறுத்துமாறும் ரஷ்ய ஜனாதிபதியை கேட்டுக் கொள்கிறேன் என்று பதிவிட்டுள்ளார்.
உக்ரைன் போர் தொடர்பாக புடினுக்கு நேரடியாக போப் பிரான்சிஸ் வேண்டுகோள் விடுப்பது இதுவே முதல்முறை.