காசாவில் தாக்குதல்கள் நிறுத்தப்பட வேண்டுமென பாப்பாண்டவர் கோரிக்கை
காசாவில் தாக்குதல்கள் நிறுத்தப்பட வேண்டுமென பாப்பாண்டவர் 14ம் லியோ கோரிக்கை விடுத்துள்ளார்.
இஸ்ரேலிய பிரதமர் பெஞ்சமின் நெத்தன்யாஹு இன்று காலை புனித பாப்பாண்டவர் 14ம் லியோவிற்கு தொலைபேசியில் அழைப்பு மேற்கொண்டுள்ளார்.
காசாவில் அமைந்துள்ள கத்தோலிக்க தேவாலயம் மீது நடத்தப்பட்ட தாக்குதலுக்கு பின்னர் இந்த அழைப்பு மேற்கொள்ளப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
காசா யுத்தத்தை முடிவுக்கு கொண்டு வர இஸ்ரேலும் ஹமாஸும் மீண்டும் பேச்சுவார்த்தையை ஆரம்பிக்க வேண்டும் என பாப்பாண்டவர் வலியுறுத்தினார்.
அந்த தாக்குதலில் குறைந்தது மூவர் உயிரிழந்து, பத்துபேர் காயமடைந்துள்ளனர்.
காசாவில் பாரிய மனிதாபிமான நிலைமை காணப்படுவதாகவும் குழந்தைகள் மற்றும் மூத்தவர்கள் நோய்களினால் பாதிக்கப்பட்டு அவதியுறுவதாகவும் பாப்பாண்டவர் தெரிவித்துள்ளார்.
மேலும், பழமையான தொழுகை கூடங்கள் மற்றும் மதவழிபாட்டு இடங்களை பாதுகாக்கும் அவசரத்தையும், அதைவிட முக்கியமாக, “பாலஸ்தீனாவிலும் இஸ்ரேலிலும் வாழும் மக்களை பாதுகாக்கும் முக்கியத்துவத்தையும்” அவர் வலியுறுத்தினார்.