கனேடிய மக்களுக்கு பாப்பாண்டவர் விடுத்துள்ள அவசர அழைப்பு
கனேடிய வாழ் மக்களுக்கு புனித பாப்பாண்டவர் முதலாம் பிரான்ஸிஸ் அவசர அழைப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார்.
எதிர்வரும் 24ம் திகதி பாப்பாண்டவர் ஏழு நாட்கள் விஜயமொன்றை மேற்கொண்டு கனடாவிற்கு வருகை தருகின்றார்.
கனடாவின் பழங்குடியின மக்களிடம் மன்னிப்பு கோரும் நோக்கில் புனித பாப்பாண்டவர் இந்த விஜயத்தை மேற்கொள்கின்றார் என்பது குறிப்பிடத்தக்கது.
கனடாவிற்கான தமது பயணத்தை பாவ விமோசன யாத்திரையாக கருதுவதாக பாப்பாண்டவர் தெரிவித்துள்ளார்.
வத்திக்கானின் புனித பீட்டர்ஸ் தேவாலயத்தில் இன்றைய தினம் அவர் இவ்வாறு கனேடிய விஜயம் பற்றி கருத்து வெளியிட்டுள்ளார்.
கனடாவிற்கான தமது விஜயம் இறைவனின் ஆசியினால் காயங்களை ஆற்றுவதற்கானதும், நல்லிணக்கத்தை ஏற்படுத்துவதற்கானதுமான ஓர் வழியாக அமையும் என நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.
தனது இந்த விஜயத்தின் போது பிரார்த்தனைகளில் கலந்து கொள்ளுமாறு கனேடிய மக்களிடம் போதுவாக அவர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
கத்தோலிக்க தேவாலயங்களினால் நிர்வாகம் செய்யப்பட்ட வதிவிடப் பாடசாலைகளில் பழங்குடியின சிறார்கள் இனச்சுத்திகரிப்பிற்கு உள்ளாக்கப்பட்டதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
இந்தக் குற்றச்சாட்டுக்களுக்காக பாப்பாண்டவர் வத்திக்கானில் பொதுமன்னிப்பு கோரியதுடன், கனேடிய விஜயத்தின் போதும் மன்னிப்பு கோருவார் என எதிர்பார்க்கப்படுகின்றது.