கனடாவில் பாலத்தின் பகுதி இடிந்து விழுந்ததால் போக்குவரத்து நிறுத்தம்
கனடாவின் மொன்றியல் நகரின் தெற்கு கரையில் உள்ள ஒரு பாலத்தின் பகுதி திடீரென இடிந்து விழுந்ததால் சில மணி நேரங்களுக்கு முழுமையாக போக்குவரத்து நிறுத்தப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இந்த சம்பவம் Sauvagine Bridge பாலத்தில் ஏற்பட்டுள்ளது. பாலத்தின் ஒரு பகுதி இடிந்து பெரிய துளை உருவாகியிருந்ததாக தெரிவிக்கப்படுகிறது.
பாலம் அமைந்துள்ள சீட்டங்கேய் நகரின் மேயர் எரிக் எல்லார்ட் இந்த சம்பவத்தில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை என்று உறுதிப்படுத்தினார்.

மேலும் அவர் சமூக ஊடகங்களில் பகிர்ந்த புகைப்படங்களில் பாலத்தின் ஒரு வழித்தடத்தின் நடுப்பகுதியில் பெரிய துளையும் வெளிப்பட்ட இரும்புக் கம்பிகளும் காணப்பட்டன. இந்த பாலம் Châteauguay River ஆற்றை கடந்து செல்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.
பாலத்தின் பராமரிப்பு மற்றும் ஆய்வு பொறுப்பு கியுபெக் போக்குவரத்து அமைச்சினை சாரும் சேர்ந்தது என மேயர் தெரிவித்துள்ளார்.
இந்த சம்பவம் பாலத்தை முழுமையாக மீளமைக்கும் நடவடிக்கைகளை விரைவுபடுத்தும் என அவர் நம்பிக்கை வெளியிட்டார்.
இதற்கிடையில், பாலத்தின் மேற்கு நோக்கிச் செல்லும் பாதை காலவரையற்ற முறையில் மூடப்பட்டுள்ளதாக போக்குவரத்து அமைச்சு தெரிவித்துள்ளது.
அதேவேளை பாதுகாப்பானதாக மதிப்பீடு செய்யப்பட்டதால் கிழக்கு நோக்கிச் செல்லும் பாதையில் இரு திசைகளுக்கும் தலா ஒரு வழித்தடம் திறக்கப்பட்டுள்ளது.
1963 ஆம் ஆண்டு கட்டப்பட்ட இந்த கான்கிரீட் பாலம் கடைசியாக 2024 செப்டம்பர் 5 ஆம் தேதி ஆய்வு செய்யப்பட்டதாகவும், அடுத்த ஆய்வு இந்த ஆண்டில் நடத்த திட்டமிடப்பட்டிருந்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த பாலம் வழியாக தினமும் சராசரியாக சுமார் 6,000 வாகனங்கள் பயணிப்பதுடன், அவற்றில் சுமார் 5 சதவீதம் கனரக லாரிகள் என்பதும் குறிப்பிடத்தக்கது