கனடாவில் சர்வதேச கவனத்தை ஈர்த்த சாலை விபத்து
கனடாவின் மொன்ட்ரியால் நகரின் சாலைகளின் தரம் குறித்து மீண்டும் கடும் விமர்சனங்கள் எழுந்துள்ளன.
கடந்த ஞாயிற்றுக்கிழமை நடந்த சர்வதேச சைக்கிளோட்டப் போட்டியின் போது டச்சு சைக்கிள் வீரர் பாஸ்கல் எங்க்ஹோன் சாலைக் குழியில் சிக்கி விபத்துக்குள்ளானார்.
120 கிலோமீட்டர் தூரம் கடந்து மவுண்ட்-ராயல் ஏற்றத்தில் நடந்த இந்த விபத்தில், எங்க்ஹோன் சாலையில் வீழ்ந்து போட்டியிலிருந்து விலக வேண்டிய நிலை ஏற்பட்டது.
இந்த காட்சி சர்வதேச ஊடகங்களில் பகிரப்பட்டது.
மொன்ட்ரியால் குடியிருப்பவர்கள் சாலைகளின் மோசமான நிலையை பற்றி கடும் அதிருப்தி வெளியிட்டுள்ளனர்.
மொன்ட்ரியால் சாலைகளின் குழி பிரச்சினை புதியதல்ல; கடந்த 50 ஆண்டுகளாகவே நகரில் சாலைகள் பழுதடைந்த காட்சிகள் தொலைக்காட்சியில் வெளியாகியுள்ளன.
நிபுணர்கள், மொன்ட்ரியால் நகரின் கடுமையான குளிர்-உறைதல் சுழற்சி, சாலையின் தரம் மற்றும் பனி உருக்க உப்பு ஆகியவை சாலைகளை விரைவாக சேதப்படுத்துவதாகக் கூறுகின்றனர்.
நகரின் சாலைகளில் மூன்றில் ஒரு பங்கு மோசமான நிலையில் காணப்படுவதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
இந்நிலையில், இந்த வார இறுதியில் நடைபெறவுள்ள மொன்ட்ரியால் மெரத்தான் ஓட்டத்துக்காக 32,000 பங்கேற்பாளர்கள் சாலையில் ஓட உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.