கொலம்பியாவை உலுக்கிய பயங்கர நிலநடுக்கம் ; 69 பேர் பலி
கொலம்பியாவின் மேற்கு பகுதிகளில் திங்கட்கிழமை ஏற்பட்ட 7.4 ரிக்டர் அளவிலான சக்திவாய்ந்த நிலநடுக்கத்தில் குறைந்தது 69 பேர் உயிரிழந்துள்ளதுடன், பலர் காயமடைந்துள்ளதாக அந்நாட்டு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
நிலநடுக்கத்தின் தாக்கத்தினால் பல நகரங்களில் கட்டடங்கள் இடிந்து விழுந்துள்ளதுடன், இடிபாடுகளுக்குள் பலர் சிக்கியுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
இதனால் உயிரிழப்பு எண்ணிக்கை மேலும் அதிகரிக்கக்கூடும் என அஞ்சப்படுகிறது.
கொலம்பியாவின் சோகோ (Chocó) பிராந்தியத்தில் அமைந்துள்ள சான் ஜோசே டெல் பால்மர் (San José del Palmar) நகராட்சிக்கு அருகில் இந்த நிலநடுக்கம் ஏற்பட்டதாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் (USGS) மற்றும் கொலம்பிய புவியியல் சேவை தெரிவித்துள்ளன.

கொலம்பிய தலைநகர் பொகோட்டாவிலிருந்து சுமார் 400 கிலோமீட்டர் தொலைவில் நிலநடுக்கத்தின் மையப்பகுதி அமைந்திருந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆரம்பத்தில் இந்த நிலநடுக்கத்தின் அளவு 6.6 ரிக்டர் என கொலம்பிய அதிகாரிகளால் மதிப்பிடப்பட்டிருந்த நிலையில், பின்னர் அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் அதன் அளவு 7.4 என அறிவித்துள்ளது.
நிலநடுக்கம் பூமிக்கு அடியில் சுமார் 107 கிலோமீட்டர் ஆழத்தில் ஏற்பட்டதாக USGS தெரிவித்துள்ளது.
நிலநடுக்கத்தின் தாக்கத்தினால் சோகோ பிராந்தியத்தின் தலைநகரான கிப்டோ (Quibdó) உள்ளிட்ட பல பகுதிகளில் கட்டடங்கள் சேதமடைந்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
பல கட்டடங்கள் இடிந்து விழுந்ததுடன், இடிபாடுகளுக்குள் மக்கள் சிக்கியுள்ளதாகவும் மீட்புப் பணிகள் தொடர்ந்து முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
சோகோ மாகாண ஆளுநர் நுபியா கரோலினா கோர்டோபா-குரி, நிலநடுக்கத்தைத் தொடர்ந்து அதிர்வுகள் ஏற்படக்கூடும் என எச்சரித்துள்ளார்.
நிலநடுக்கத்தின் மையப்பகுதி சான் ஜோசே டெல் பால்மர் அருகில் இருந்த போதிலும், கிப்டோ நகரிலும் கட்டடங்களுக்கு குறிப்பிடத்தக்க சேதம் ஏற்பட்டுள்ளதாகவும், பலர் காயமடைந்துள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
தற்போது சேத மதிப்பீட்டு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும், முதலாவது உத்தியோகபூர்வ அறிக்கை விரைவில் வெளியிடப்படும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
நிலநடுக்கத்தின் அதிர்வுகள் தலைநகர் பொகோட்டா வரையிலும் உணரப்பட்டுள்ளன. பொகோட்டாவில் வாகனங்கள் மற்றும் கட்டடங்களில் பொருத்தப்பட்டிருந்த எச்சரிக்கை அலாரங்கள் செயல்பட்டதுடன், அச்சமடைந்த மக்கள் தங்களது வீடுகளை விட்டு வெளியேறி வீதிகளில் தஞ்சமடைந்ததாக தெரிவிக்கப்படுகிறது.
பொகோட்டா மேயர் கார்லோஸ் பெர்னாண்டோ கலான், நிலநடுக்கம் ஏற்பட்ட சிறிது நேரத்திலேயே வெளியிட்ட தகவலில், நகரில் உயிரிழப்புகள் அல்லது காயமடைந்தவர்கள் தொடர்பான தகவல்கள் எதுவும் கிடைக்கவில்லை என தெரிவித்தார்.

எனினும், சில கட்டடங்களில் விரிசல்கள் ஏற்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் வசிக்கும் மக்கள் அவதானமாக இருக்குமாறு கொலம்பியா மற்றும் அண்டை நாடான ஈக்வடார் ஆகிய நாடுகளின் அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளனர்.
நிலநடுக்கத்திற்குப் பின்னர் ஏற்படக்கூடிய அதிர்வுகள் தொடர்பில் மக்கள் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் எனவும் அதிகாரிகள் வலியுறுத்தியுள்ளனர்.
இதனிடையே, அமெரிக்க சுனாமி எச்சரிக்கை அமைப்பு, இந்த நிலநடுக்கத்தைத் தொடர்ந்து சுனாமி எச்சரிக்கை எதுவும் விடுக்கப்படவில்லை என தெரிவித்துள்ளது.
நிலநடுக்கத்தால் அதிகம் பாதிக்கப்பட்ட பகுதிகளில் அவசரகால மீட்புக் குழுக்கள் களமிறக்கப்பட்டுள்ளதுடன், சேதமடைந்த கட்டடங்கள் மற்றும் இடிபாடுகளுக்குள் சிக்கியுள்ளவர்களை மீட்கும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 69 ஆக உயர்ந்துள்ள நிலையில், பலர் காயமடைந்துள்ளதால் உயிரிழப்பு எண்ணிக்கை மேலும் அதிகரிக்கக்கூடும் என அஞ்சப்படுகிறது.
நிலநடுக்கத்தால் ஏற்பட்ட முழுமையான சேத விபரங்கள் தொடர்பில் அதிகாரிகள் தொடர்ந்தும் மதிப்பீடுகளை மேற்கொண்டு வருகின்றனர்.
கொலம்பியா அண்மைய காலங்களில் எதிர்கொண்டுள்ள மிகப் பெரிய நில அதிர்வுகளில் ஒன்றாக இந்த நிலநடுக்கம் பதிவாகியுள்ள நிலையில், பாதிக்கப்பட்ட மக்களுக்கு அவசர உதவிகளை வழங்குவதற்கான நடவடிக்கைகளும் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.