பனாமாவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ; சுனாமி எச்சரிக்கை விடுப்பு
வட அமெரிக்காவில் பனாமாவின் தெற்கு கடற்கரைப் பகுதிக்கு அருகே ரிக்டர் அளவுகோலில் 7.7 ஆகப் பதிவான சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் (USGS) தெரிவித்துள்ளது.
கடலுக்கு அடியில் சுமார் 10 கிலோமீட்டர் ஆழத்தில் இந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. நிலநடுக்கத்தைத் தொடர்ந்து, ஆரம்பக்கட்டத் தகவல்களின்படி உயிரிழப்புகள் அல்லது சொத்துச் சேதங்கள் எதுவும் பதிவாகவில்லை.
அத்துடன், பனாமா கால்வாய் வழியாக இடம்பெறும் கப்பல் போக்குவரத்து வழமைபோல் இயங்குவதாக பனாமா கால்வாய் அதிகாரசபை தெரிவித்துள்ளது.
நிலநடுக்கம் ஏற்பட்டதைத் தொடர்ந்து, அச்சமடைந்த மக்கள் கட்டடங்களிலிருந்து வெளியேறி பாதுகாப்பான இடங்களுக்குச் சென்றதாகத் தெரிவிக்கப்படுகிறது.
இதற்கிடையில், நிலநடுக்கத்தின் தாக்கத்தைத் தொடர்ந்து, மூன்று மணி நேரத்திற்குள் பனாமா, கொலம்பியா, கோஸ்டா ரிக்கா, ஈக்வடார், பெரு, நிக்கராகுவா, குவாத்தமாலா, எல் சால்வடோர் மற்றும் மெக்சிகோ ஆகிய நாடுகளின் சில கடலோரப் பகுதிகளில் ஆபத்தான சுனாமி அலைகள் ஏற்படக்கூடும் என அமெரிக்க சுனாமி எச்சரிக்கை அமைப்பு எச்சரிக்கை விடுத்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், ஹவாய் தீவுகளுக்கும் சுனாமி அச்சுறுத்தல் இருப்பதாக அந்த அமைப்பு குறிப்பிட்டுள்ளது.
நிலநடுக்கத்தால் பாதிக்கப்படக்கூடிய கடலோரப் பகுதிகளில் உள்ள மக்கள், அதிகாரிகளின் அறிவுறுத்தல்களைப் பின்பற்றி அவதானத்துடன் செயற்படுமாறு அறிவுறுத்தப்படுகின்றனர்.