சக்தி வாய்ந்த நாடுகள் வேடிக்கை மட்டுமே பார்க்கிறது; உக்ரைன் அதிபர் கவலை
உக்ரைன் மீது ராணுவ நடவடிக்கை மேற்கொள்ள ரஷ்ய அதிபர் புடின் அதிரடியாக உத்தரவு பிறப்பித்ததையடுத்து நேற்று காலை முதல் ரஷ்ய துருப்புக்கள் உக்ரைனை தாக்கி வருகின்றன.
இந்த போரில் உக்ரைனில் உள்ள ராணுவ நிலைகள், விமான தளங்கள், ராணுவ கிடங்குகள் மீது தாக்குதல் நடத்தப்பட்டது. தொடர்ந்து இரண்டாவது நாளாக இன்றும் ரஷ்ய படைகள் உக்ரைன் மீது தாக்குதல் நடத்தி வருகின்றன.
இந்நிலையில், உக்ரைன் அதிபர் விளாடிமிர் ஜெலன்ஸ்கி (Volodymyr Zelenskyy) கூறுகையில்,
உலகின் சக்தி வந்த நாடான ரஷ்யாவை நேற்று எப்படி தனியாக எதிர்த்தோமோ, அதேபோலதான் 2வது நாளான இன்றும் தனியாக எதிர்த்து வருகிறோம். உலகின் பிற சக்திவாய்ந்த நாடுகள் எல்லாம் வேடிக்கை மட்டுமே பார்த்து வருகிறது.
மேற்கத்திய நாடுகள் எங்களை முற்றிலுமாக கைவிட்டுள்ளது. இதை எதிர்பார்த்தோம் என்றாலும் கூட அதிக வேதனையை தருகிறது. உக்ரைன் மீது ரஷியா நடத்தும் போருக்கு எதிராகவும் உக்ரைனுக்கு ஆதரவாகவும் ரஷியாவில் போராட்டம் நடத்தும் மக்களுக்கு மனமார்ந்த நன்றி என அவர் கூறினார்.
அதேசமயம் உக்ரைன் விவகாரம் தொடர்பாக ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் (Vladimir Putin) மற்றும் பிரான்ஸ் அதிபர் இமானுவேல் மேக்ரான் (Emmanuel Macron) ஆலோசனை நடத்தி வருவதாக ரஷ்ய அதிபர் அலுவலகம் அதிகாரப்பூர்வ அறிவித்துள்ளது.
நேட்டோ அமைப்பில் பிரான்ஸ் உள்ள நிலையில் ரஷிய அதிபர் விளாடிமிர் புதினுடன் (Vladimir Putin) மேக்ரான் (Emmanuel Macron) பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றமை இங்கு குறிப்பிடத்தக்கது.