ஏப்ரலில் ஏலத்திற்கு வரும் அரிய வகை நீல நிற வைரத்தின் விலை இத்தனை கோடியா?
அளவில் பெரியதும், அரிய வைரங்களில் ஒன்றானதுமான நீல நிற வைரம் ஒன்று இந்தாண்டு ஏப்ரலில் ஹாங்காங்கில் ஏலத்திற்கு வர இருக்கிறது.
இது சுமார் 359 கோடிக்கு ஏலம் போகும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. வைரங்கள் என்றாலே அதற்கு தனி மவுசுதான். அதிலும் நீல நிற வைரங்கள் மிக மிக விலை உயர்ந்தவையாகக் கருதப்படுகின்றன.
காரணம் அவை மிக அபூர்வமாகக் கிடைப்பவை என்பதால் தான். எனவே அத்தகைய வைரங்களை ஏலத்தில் எடுக்க வைர வியாபாரிகளிடத்தில் அதிக போட்டி இருக்கும்.
இதன்படி தென்னாப்பிரிக்காவின் கல்லினன் சுரங்கத்தில் இருந்து கடந்தாண்டு எடுக்கப்பட்ட நீல நிற வைரக்கல்லான டி பீர்ஸ் கல்லினன் ப்ளூ (De Beers Cullinan Blue), வரும் ஏப்ரலில் ஏலத்தில்விடப்பட இருக்கிறது.
இதுவரை கண்டுபிடிக்கப்பட்ட நீல வைரங்களிலேயே மிகப் பெரியது மற்றும் மிக விலை உயர்ந்ததாக இந்த வைரம் தான் கருதப்படுகிறது. 15.10 கேரட் என மதிப்பிடப்பட்டுள்ள இந்த வைரம் தற்போது சோதஃபி என்ற நிறுவனத்திற்கு சொந்தமாக உள்ளது.
ஹாங்காங்கில் உள்ள பிரபல ஏல நிறுவனமான ஃபைன் ஆர்ட்ஸ் நிறுவனத்தில் இந்த பிரம்மாண்ட ஏலம் நடைபெற இருக்கிறது. இது 48 மில்லியன் டாலர், அதாவது சுமார் 359 கோடிக்கு ஏலம் போகும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
எனினும் இதுவரை ஏலத்தில் விடப்பட்ட நீல வைரங்கள் அனைத்தும், பெரும்பாலும் 10 கேரட்டிற்கும் குறைவானவையே. மிக அரிதாக 10 கேரட்டிற்கும் அதிமான வைரங்கள் ஏலமிடப்பட்டுள்ளன. ஆனால் இதுவரை 15 கேரட்டிற்கு அதிமான வைரம் ஏலமிடப்பட்டதில்லை என்கின்றனர் வைர நிபுணர்கள்.
இதனால் மேற்கூறிய நீல நிற வைரக்கல்லை ஏலத்தில் எடுக்க கடும் போட்டி இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்நிலையில் இதற்கு முன்னர் கடந்த 2016ம் ஆண்டு மே மாதம் ஏலத்திற்கு வந்த ஓப்பன்ஹைமர் ப்ளூ வைரம் தான் இதுவரை அதிக தொகைக்கு ஏலத்தில் விடப்பட்ட வைரமாகும்.
ஜெனீவாவின் கிறிஸ்ட்-ல் நடந்த இந்த ஏலத்தில், 14.6 கேரட்டில் ஆன இந்த வைரத்தை 57.5 மில்லியன் அமெரிக்க டாலர்களுக்கு ஏலத்தில் எடுத்தனர். இது இந்திய மதிப்பில் 4,29,43,53,000 ரூபாய் ஆகும்.
மேலும் இந்த ஓப்பன்ஹைமர் ப்ளூ வைரத்தின் ஏலத்தொகையைவிட, டி பீர்ஸ் கல்லினன் ப்ளூ வைரம் அதிக விலைக்கு ஏலத்தில் எடுக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இப்போதே இந்த வைரத்தை தங்களுக்கு உரிமையாக்கிக் கொள்ள பலர் ஆயத்தமாகி வருகின்றனர். இதனாலேயே ஏலத்தொகை மேலும் அதிகரிக்க வாய்ப்பிருப்பதாக சம்பந்தப்பட்ட ஏல நிறுவனம் எதிர்பார்க்கிறது.