பாரிஸில் குவிந்த விண்ணப்பங்களால் சிக்கல்!
பாரிஸ் பிராந்தியத்தில் கடவுச் சீட்டு, அடையாள அட்டை போன்றவற்றைப் புதுப்பிக்கவும் புதிதாகப் பெற்றுக் கொள்ளவும் இருந்து பெரும் தொகை விண்ணப்பங்கள் கிடைத்துள்ளதாக தகவல் வெளியாகியிருக்கிறது.
கொரோனா தொற்றுக் காரணமாக முடங்கியிருந்த அடையாள ஆவணப் புதுப்பிப்புப் பணிகள் மீள ஆரம்பித்ததை அடுத்தே நாடு முழுவதும் விண்ணப்பங்களை ஏற் கும் பணியிடங்களில் நெருக்கடி நிலை தோன்றியுள்ளது.
கடந்த இரண்டு வருடகாலத்துக்குப் பிறகு பலரும் வெளிநாட்டுப் பயணங்களை மேற்கொள்வதற்குத் தம்மைத் தயார் செய்துவருவதால் கடவுச்சீட்டுக்களைப் புதுப்பிப்போர் எண்ணிக்கை திடீரென அதிகரித்துள்ளதாக கூறப்படுகின்றது.
பாரிஸ் நகரை உள்ளடக்கிய இல்-து-பிரான்ஸ் பிராந்தியத்தில் இருந்து கடந்த சில வாரங்களில் அடையாள ஆவணங்கள் தொடர்பாகப் பெரும் எண்ணிக்கையில் விண்ணப்பங்கள் வந்து குவிந்துள்ளதாக அடையாள ஆவணங்களைப் புதுப்பித்து வழங்கும் அரச திணைக்களம் தெரிவித்துள்ளது.
இந்நிலையில் பாரிஸைச் சேர்ந்தவர்கள் சிறிது நாட்கள் பொறுத்திருந்து தங்கள் விண்ணப்பங்களைச் சமர்ப்பிப்பது நல்லது என்று அதிகாரிகள் ஆலோசனை வழங்கியுள்ளனர்.
இணைய வழியில் விண்ணப்பங்களை சமர்ப்பிக்கின்ற தளங்களில் தொடர்ந்து நெருக்கடி நிலை காணப்படுகிறதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
கடவுச் சீட்டுப் புதிப்பிப்பதற்கான பாரிஸ் நகரசபையின் இணையத் தளத்தில் விண்ணப்பங்களுக்கான நேர்முகச் சந்திப்புகளைப் பெற முடியாத நிலை நீடிப்பதாகச் செய்திகள் வெளியாகியுள்ளன.
இதன் காரணமாக விண்ணப்பங்களை ஒப்படைத்து 21 நாட்களின் பின்னரே கடவுச்சீட்டு வழங்கப்படும் என நகரசபைஅறிவித்திருக்கிறது.
சுமார் 40 ஆயிரம் பேர் நகரசபையின் இணையத் தளத்தை அணுகி விண்ணப்பங்களைச் சமர்ப்பிப்பதற்கான நேர்முகத்தைக் கோரியுள்ளனர் என்று கூறப்படுகிறது.
அதேசமயம் சில நகரங்களில் விண்ணப்பங்களை ஏற்பது வரும் ஜூன் மாதம் வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளதாகவும் அந்த தகவல்கள் மேலும் கூறுகின்றன.