இஸ்ரேல் ராணுவ வீரர்களின் தாக்குதலில் பேராசிரியர் ஒருவரின் 7 மாத குழந்தை பலி
பாலஸ்தீனத்தை சேர்ந்த குடும்பத்தினர் மீது இஸ்ரேல் ராணுவ வீரர் ஒருவர் நடத்திய துப்பாக்கி சூட்டில் 7 மாத குழந்தை உயிரிழந்ததாக வெளியாகியிருக்கும் தகவல் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
பெத்லகேம் பல்கலைக்கழகத்தில் பேராசிரியராக பணியாற்றி வருபவர் பஹத் அபு ஹைக்கல். இவர் தனது மனைவி, 10 வயது மகன் மற்றும் 7 மாத ஆண் குழந்தை ஆகியோருடன் காரில் சென்று கொண்டிருந்தார்.

அப்போது சாலையோரம் இஸ்ரேல் ராணுவ வீரர்கள் சிலர் நின்று கொண்டிருந்தனர். அவர்கள் துப்பாக்கியை காட்டி காரை நிறுத்துமாறு கூறியுள்ளனர்.
இதனைக் கண்டு உடனடியாக பஹத் அபு காரை நிறுத்தியுள்ளார். மேலும் தனது கையை ஸ்டீயரிங் வீலில் இருந்து எடுத்து உயர்த்திக் காண்பித்துள்ளார். ஆனால் அங்கு நின்று கொண்டிருந்த இஸ்ரேல் ராணுவ வீரர் ஒருவர், திடீரென பஹத்தின் காரை நோக்கி துப்பாக்கி சூடு நடத்த தொடங்கினார்.
இதில் பஹத்தின் கையில் தோட்டா பாய்ந்த நிலையில், பின் இருக்கையில் அவரது மனைவியின் கையில் இருந்த 7 மாத குழந்தையின் மீதும் தோட்டா பாய்ந்தது. இதில் அந்த குழந்தை பரிதாபமாக உயிரிழந்தது.
இந்த சம்பவம் குறித்து இஸ்ரேல் பாதுகாப்பு படை அளித்துள்ள விளக்கத்தில், அந்த கார் தங்கள் ராணுவ வீரர்களை நோக்கி வேகமாக முன்னேறி வந்ததால், தற்காப்புக்காக அவர்கள் துப்பாக்கி சூடு நடத்தினர் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆனால், பஹத் இதனை மறுத்துள்ளார். ராணுவ வீரர்களை பார்த்ததும் வாகனத்தை நிறுத்திவிட்டதாக அவர் கூறியுள்ளார். தனது மகனை கொன்ற இஸ்ரேல் ராணுவ வீரர் மீது விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என அவர் வலியுறுத்தியுள்ளார்.
முன்னதாக கடந்த மார்ச் மாதம் வடக்கு ஜோர்டான் பள்ளத்தாக்கில் உள்ள தமூன் கிராமத்தில், வாகனம் ஒன்றின் மீது இஸ்ரேல் ராணுவத்தினர் நடத்திய துப்பாக்கி சூட்டில், ஒரு பாலஸ்தீன தம்பதியினரும், அவர்களது 2 குழந்தைகளும் கொல்லப்பட்டனர் என்பது நினைவுகூரத்தக்கது.