கனேடிய நாடாளுமன்றத்தை முற்றுகையிட்ட போராட்டக்காரர்கள்; அதிரடியாக கைது!
கொரோனா தொற்று பரவாமல் தடுக்க கனடாவில் அரசு கொரோனா கட்டுப்பாடுகளை கடுமையாக்கியது. அத்துடன் பொது இடங்களில் நடமாடுவோர், பொது போக்குவரத்தில் பயணிப்போருக்கு தடுப்பூசி சான்றிதழ் கட்டாயமாக்கப்பட்டுள்ளது.
அமெரிக்காவில் இருந்து வருவோருக்கு கூடுதல் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. லாரி டிரைவர்களுக்கு தடுப்பூசி கட்டாயம். தடுப்பூசி போடாதவர்கள் ஒரு வாரம் தனிமைப்படுத்தப்படுவார்கள் என அரசு உத்தரவிட்டது.
இதற்கு எதிர்ப்பு தெரிவித்து லாரி டிரைவர்கள், தலைநகர் ஒட்டாவாவில் உள்ள முக்கிய சாலைகளில் லாரிகளை நிறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இதனால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது.
பொருளாதார முக்கியத்துவம் வாய்ந்த ஒட்டாவா பாலத்தைப் போராட்டக்காரர்கள் முடக்கியதால் அமெரிக்கா - கனடா இடையிலான வர்த்தகம் முழுவதுமாக பாதிக்கப்பட்டது.
இதனையடுத்து பொலிசார் துணையுடன் பாலம் திறக்கப்பட்டு போக்குவரத்து நடைபெறுகிறது. இந்தப் போராட்டத்தை ஒடுக்கும் விதமாக நாடு முழுவதும் அவசரநிலை சட்டத்தை பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ அறிவித்தார்.
தொடர்ந்து 50 ஆண்டுகளுக்கு பிறகு கனடாவில் அவசர நிலை சட்டம் அமலுக்கு வந்துள்ளது. அந்நாட்டு நாடாளுமன்றத்தில் பேசிய பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ, சட்டவிரோத மற்றும் ஆபத்தான நடவடிக்கைகள் நிறுத்தப்பட வேண்டிய நேரம் இது என குறிப்பிட்டார்.
இந்நிலையில், கனடா நாடாளுமன்றம் அருகில் முற்றுகையிட்டிருந்த ஆர்ப்பாட்டக்காரர்களை பொலிசார் கைது செய்து வாகனங்களை பறிமுதல் செய்ததுடன், குறைந்தது 70 பேர் கைது செய்யப்பட்டனர்.
மேலும் இதன்போது சுமார் 2 டஜன் வாகனங்கள் இழுத்துச் செல்லப்பட்ட நிலையில், இந்த தடியடியில் ஒரு அதிகாரிக்கு சிறிய காயம் ஏற்பட்டதாக ஒட்டாவா பொலிஸார் தெரிவித்தனர்.