பிரான்ஸ் , இத்தாலி எதிர்ப்பு; EU விவசாயிகள் போராட்டம்; முக்கிய ஒப்பந்தம் ஒத்திவைப்பு
தென் அமெரிக்க நாடுகளுடன் மேற்கொள்ளப்படவிருந்த மிகப்பெரிய சுதந்திர வர்த்தக ஒப்பந்தத்தை (EU–Mercosur) ஐரோப்பிய ஒன்றியம் (ஈயூ) ஜனவரி மாதத்திற்கு ஒத்திவைத்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
ஈயூ விவசாயிகளின் கடும் எதிர்ப்பும், பிரான்ஸ் மற்றும் இத்தாலி முன்வைத்த கடைசி நேர எதிர்ப்பும் இந்த முடிவுக்கு காரணமாக அமைந்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

ஈயூ விவசாயிகளின் கடும் எதிர்ப்பு
இந்த ஒப்பந்தத்திற்கு எதிராக பிரஸல்ஸில் ஆயிரக்கணக்கான விவசாயிகள் உழவு இயந்திரத்துடன் வீதிகளை மறித்து பட்டாசுகள் மற்றும் டயர்களை எரித்தும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
ஈயூ–மெர்கோசூர் வர்த்தக ஒப்பந்தம் அடுத்த வருடம் ஜனவரி மாதம் தான் கையெழுத்தாகும் என ஐரோப்பிய ஆணையத்தின் தலைமை பேச்சாளர் பவுலா பின்யோ வியாழக்கிழமை (18) உறுதிப்படுத்தினார்.
சுமார் 25 ஆண்டுகளாக பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வந்த இந்த ஒப்பந்தம் மீண்டும் தாமதமடைந்துள்ளது. இந்த ஒப்பந்தத்தில் கையெழுத்திட ஐரோப்பிய ஆணையத் தலைவர் உர்சுலா வான் டெர் லெயன் பிரேசிலுக்கு பயணம் செய்யவிருந்தார்.

ஆனால், ஈயூ உறுப்புநாடுகளில் பெரும்பான்மையான ஆதரவு கிடைக்காததால் பயணம் ஒத்திவைக்கப்பட்டது.
பிரஸல்ஸில் நடைபெற்ற ஈயூ உச்சி மாநாட்டின் போது, வான் டெர் லெயன், ஐரோப்பிய கவுன்சில் தலைவர் அன்டோனியோ கோஸ்டா மற்றும் இத்தாலி பிரதமர் ஜார்ஜியா மெலோனி ஆகியோருக்கு இடையில் ஜனவரி மாதம் ஒப்பந்தத்திற்கு ஆதரவு அளிக்கும் நிபந்தனையுடன் ஒத்திவைப்புக்கு முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
இதற்கிடையில், பிரான்ஸ் அதிபர் இமானுவேல் மக்ரோன், விவசாயிகளின் நலனை முன்னிறுத்தி, மேலும் சலுகைகள் மற்றும் கூடுதல் பேச்சுவார்த்தைகள் தேவை எனக் கூறி ஒப்பந்தத்தை தள்ளிவைக்க வலியுறுத்தினார்.

இத்தாலி, போலந்து, பெல்ஜியம், ஆஸ்திரியா, அயர்லாந்து உள்ளிட்ட நாடுகளுடன் இது தொடர்பாக ஆலோசித்ததாகவும் அவர் தெரிவித்தார்.
அதேவேளை இந்த ஒப்பந்தம் உலகின் மிகப்பெரிய சுதந்திர வர்த்தக மண்டலத்தை உருவாக்கும் என்பதுடன், வாகனங்கள், இயந்திரங்கள், மதுபானங்கள் உள்ளிட்ட ஈயூ தயாரிப்புகளின் லத்தீன் அமெரிக்க ஏற்றுமதியை அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.