கனடாவில் இந்த வகை பானங்களுக்கு விதிக்கப்பட உள்ள தடை
கனடாவின் கியூபெக் மாகாணத்தில் 16 வயதிற்குட்பட்ட சிறுவர்களுக்கு எனர்ஜி டிரிங்க்ஸ் எனப்படும் சக்தி பானங்களை விற்பனை செய்வதைத் தடை செய்யும் புதிய மசோதாவை கியூபெக் சுகாதார அமைச்சர் சோனியா பெலாஞ்சர் கடந்த வெள்ளிக்கிழமை தாக்கல் செய்தார்.
இந்த மசோதாவிற்கு தேசிய அவையிலுள்ள அனைத்து அரசியல் கட்சிகளும் தங்களது ஆதரவை தெரிவித்துள்ளன.
எனினும், கடந்த மார்ச் மாதம் முதல் கியூபெக் கன்சர்வேடிவ் கட்சியில் இணைந்துள்ள சுயேச்சை நாடாளுமன்ற உறுப்பினரான மிட்டே பிளான்ஷெட் வெசினா மட்டும் இதற்கு ஆதரவளிக்கவில்லை.

விரைந்து சட்டமாக்க முயற்சி வரும் ஜூன் 12-ஆம் திகதியுடன் இந்த நாடாளுமன்ற கூட்டத்தொடர் நிறைவடைய உள்ளதால், அதற்குள் இந்த சட்டத்தை அவசரமாக நிறைவேற்ற அனைத்து நாடாளுமன்ற உறுப்பினர்களின் ஆதரவும் தேவையாக உள்ளது.
மசோதா உருவானதன் பின்னணி கடந்த 2024-ஆம் ஆண்டு, சக்கரி மிரோன் என்ற 15 வயது சிறுவன், தான் உட்கொண்டு வந்த ஏடிஹெச்டி சக்தி பானத்தை குடித்ததால் ஏற்பட்ட பாதிப்பால் உயிரிழந்ததாக தெரிவிக்கப்படுகின்றது.
அவனது பெற்றோரின் தொடர் போராட்டத்தின் விளைவாகவே இந்த 'மசோதா 9' (Bill 9) தற்போது கொண்டுவரப்பட்டுள்ளது.
அண்மைய மாதங்களில் கல்வி, விளையாட்டு மற்றும் சுகாதாரத் துறையைச் சேர்ந்த பல அமைப்புகள் இந்த 'சக்கரி மிரோன் இயக்கத்திற்கு' தங்களது ஆதரவை வழங்கி வருகின்றன.
மேலும், கடந்த மாதம் 35,000-க்கும் அதிகமான குடிமக்கள் கையெழுத்திட்ட மனு ஒன்றும் தேசிய அவையில் சமர்ப்பிக்கப்பட்டது.
இளைஞர்களின் ஆரோக்கியத்தில் எனர்ஜி டிரிங்க்ஸ் ஏற்படுத்தும் தீமைகளைத் தடுப்பதே இந்த மசோதாவின் முக்கிய நோக்கமாகும். 16 வயதிற்குட்பட்ட எவருக்கும் சக்தி பானங்களை விற்பனை செய்ய தடை விதிக்கப்படுகிறது.
அதேபோல், 16 வயதிற்குட்பட்ட சிறுவர்கள் தங்களுக்காகவோ அல்லது மற்றவர்களுக்காகவோ இத்தகைய பானங்களை வாங்குவதும் தடை செய்யப்பட்டுள்ளது.
ஒரு லிட்டருக்கு 150 மில்லிகிராம் அல்லது அதற்கு மேல் காஃபின் அளவு கொண்ட மற்றும் டாரின், வைட்டமின்கள் அல்லது தாதுக்கள் கலந்த பானங்கள் அனைத்தும் இந்த சட்டத்தின் கீழ் 'எனர்ஜி டிரிங்க்ஸ்' என வகைப்படுத்தப்படும்.
இந்த மசோதாவை அவையில் தாக்கல் செய்த பிறகு, அவையின் பார்வையாளர் மாடத்தில் அமர்ந்திருந்த சக்கரியின் பெற்றோர்களான டேவிட் பிரோன் மற்றும் வெரோனிகா மார்டினெஸ் ஆகியோரை சுகாதார அமைச்சர் சோனியா பெலாஞ்சர் நெகிழ்ச்சியுடன் நினைவு கூர்ந்தார்.