கனடாவில் பற்றி எரிந்த காரில் இருந்தவரை உயிருடன் மீட்ட பொலிஸார்
கனடாவில் பற்றி எரிந்த காரில் சிக்கியிருந்தவரை பொலிஸார் தைரியமாக மீட்டுள்ளனர்.
மொன்றியாலின் வடகிழக்கே உள்ள லாஎசோம்சன் பகுதியில் எரியும் காரில் சிக்கிய ஒருவரே இவ்வாறு உயிருடன் மீட்கப்பட்டுள்ளார்.
இந்த துணிச்சலான செயலை செய்த இரண்டு பொலிஸ் உத்தியோகத்தர்களுக்கு பாராட்டுக்கள் குவிந்து வருவதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
கேப்ரியல் டாவ் மற்றும் நோமி வெஸினா ஆகிய பொலிஸ் உத்தியோகத்தர்கள் தீப்பற்றி எரிந்து கொண்டிருந்த வாகனத்தை கண்டு அருகில் சென்றுள்ளனர்.
இதன் போது கார் முழுவதும் தீப்பற்றி எரிந்து கொண்டிருந்த நிலையில், உள்ளே சிக்கியிருந்த ஒருவர் “நான் சாகப்போகிறேன், கார் முழுவதும் தீ பிடித்துவிட்டது” என்று கத்திக் கொண்டிருந்தார் என பொலிஸ் உத்தியோகத்தர்கள் தெரிவித்துள்ளனர்.
இருவரும் உடனடியாக பின்புற சாளரத்தை உடைத்து, அந்த நபரை பின்புறம் நகர்த்தி வெளியே எடுத்து வந்தனர்.
அவர் மயக்கமடைந்த நிலையில் இருந்ததால், தீ வேகமாக பரவிக் கொண்டிருந்த போதும் அவரை பாதுகாப்பாக சாலையோரம் தூக்கிச் சென்றுள்ளனர்.
இவ்வாறு குறித்த நபரை மீட்டு சில நிமிடங்களில் கார் முழுவதுமாக வெடித்து எரிந்து சாம்பலானது எனத் தெரிவிக்கப்படுகின்றது.
மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்ட அந்த நபர் தற்போது சிகிச்சை பெற்று வீடு திரும்பியுள்ளார்.
விபத்துக்கான காரணம் குறித்து விசாரணை நடைபெற்று வருவதாகத் தெரிவிக்கப்படுகின்றது.