கனேடிய குடியுரிமைச் சான்றிதழ்களை ஒப்படைக்கக் கோரியது ஏன்? புலம்பெயர்தல் அமைச்சரிடம் கேள்வி
சிலருடைய கனேடிய குடியுரிமைச் சான்றிதழ்களை ஒப்படைக்கக் கோரியது ஏன் என புலம்பெயர்தல் அமைச்சரிடம் கேள்வி எழுப்பப்பட்டது.
கனடாவில், வம்சாவளி அடிப்படையிலான கனேடிய குடியுரிமைச் சட்ட மசோதா நிறைவேற்றப்பட்டதைத் தொடர்ந்து, ஆயிரக்கணக்கானோருக்கு குடியுரிமைச் சான்றிதழ்கள் வழங்கப்பட்டன.

இந்நிலையில், தங்கள் குடியுரிமைச் சான்றிதழ்களை ஒப்படைக்கக் கோரி அவர்களில் பலருக்கு கனேடிய புலம்பெயர்தல், அகதிகள் மற்றும் குடியுரிமை அமைப்பு கடிதம் அனுப்பியதால் மக்கள் அதிர்ச்சியடைந்தார்கள்.
பின்னர், அத்தகைய கடிதம் அனுப்பப்பட்ட பலரில் சிலருக்கு வார இறுதியில் மீண்டும் ஒரு கடிதம் அனுப்பப்பட்டது.
அந்தக் கடிதத்தில், நீங்கள் குடியுரிமைச் சான்றிதழ் பெறுவதற்காக அளித்த ஆவணங்களை மீளாய்வு செய்ததைத் தொடர்ந்து, ஜூன் மாதம் 13ஆம் திகதி உங்கள் குடியுரிமைச் சான்றிதழை ஒப்படைக்குமாறு உங்களிடம் கோரப்பட்டது.
உங்கள் வழக்கு முழுமையாக மீளாய்வு செய்யப்பட்டதைத் தொடர்ந்து, உங்கள் குடியுரிமை மீண்டும் உறுதி செய்யப்பட்டுள்ளது என குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்நிலையில், சிலருடைய கனேடிய குடியுரிமைச் சான்றிதழ்களை ஒப்படைக்கக் கோரியது ஏன் என புலம்பெயர்தல் அமைச்சரான Lena Diabஇடம் ஊடகவியலாளர்கள் கேள்வி எழுப்பினார்கள்.

ஆனால், அதற்கு அவர் நேரடியாக விளக்கமளிக்கவில்லை. மாறாக, ஏதோ பிரச்சினை இருப்பதாக நான் அறிந்துகொண்டேன், அது என்ன என்று எனக்கு உறுதியாகத் தெரியவில்லை. ஆகவே, அது தொடர்பில் விசாரணை நடத்துமாறு துறை அதிகாரிகளுக்கு உத்தரவிட்டேன் என்று மட்டும் கூறியுள்ளார் Lena Diab.
இதற்கிடையில், வம்சாவளி அடிப்படையிலான கனேடிய குடியுரிமைச் சட்டத்தின் கீழ் குடியுரிமைச் சான்றிதழ் பெற்ற சிலர், தங்கள் வம்சாவளி குறித்து முறைப்படி அதிகாரிகளிடமிருந்து சான்றிதழ் பெறாமல், அதிகாரப்பூர்வமற்ற வம்சாவளி இணையதளங்களிலிருந்து தங்கள் வம்சாவளி குறித்து அறிந்துகொண்டதாக அதிகாரப்பூரவமற்ற தகவல்கள் தெரிவிக்கின்றன.
அத்துடன், ஒரிஜினல் சான்றிதழ்கள் இல்லாதவர்கள் எழுத்துப்பூர்வ விளக்கம் அளிக்கத் தவறிவிட்டதாகவும், அத்தகையவர்களின் குடியுரிமைச் சான்றிதழ்களைத்தான் ஒப்படைக்கக்கோரி கனேடிய புலம்பெயர்தல், அகதிகள் மற்றும் குடியுரிமை அமைப்பு கடிதம் அனுப்பியதாகவும் கூறப்படுகிறது.
என்றாலும், இவை அதிகாரப்பூர்வ தகவல்கள் அல்ல என்பதை கவனத்தில் கொள்வது நல்லது.