விமானிக்காக 8 மணி நேரம் காத்திருந்த பயணிகள்: விமானங்களை தவறவிட்ட ஆயிரக்கணக்கானோர்
பிரித்தானியாவின் மான்செஸ்டரில் விமானிக்காக பயணிகள் சுமார் 8 மணி நேரம் காத்திருந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
குறித்த விமானம் பின்னர் ரத்து செய்யப்பட்டதாக பயணிகளுக்கு குறுந்தகவல் மூலம் தெரிவிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இதனிடையே டப்ளின் விமான நிலையத்தில் நீண்ட வரிசையில் காத்திருந்த பயணிகள், ஆடல் பாடலுடன் பொழுதை போக்கியுள்ளனர்.
மேலும், ஸ்டான்ஸ்டெட் விமான நிலையத்தில், ரத்து விவகாரம் காரணமாக பயணிகள் இரவில் தரையில் தூங்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.
ஊழியர்கள் பற்றாக்குறை காரணமாகவே இதுபோன்ற குழப்பங்கள் ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. பிரித்தானியாவில் இருந்து மட்டும் வியாழன் முதல் ஞாயிறு வரை சுமார் 10,000 பேர்கள் பயணம் மேற்கொண்டுள்ளனர்.
இதனிடையே, மென்பொருள் கோளாறு காரணமாக வார இறுதியில் பல விமானங்கள் ரத்தாகும் சூழல் ஏற்பட்டுள்ளதாக EasyJet நிர்வாகம் தெரிவித்துள்ளது.
மேலும், லண்டன் கேட்விக் விமான நிலையத்தில் இருந்து அடுத்த திங்கட்கிழமை வரையில் 200 விமானங்கள் ரத்தாகும் என அறிவித்துள்ளனர்.
இதனிடையே, Tui விமான சேவைகளை ரத்து செய்த நிலையில் மான்செஸ்டர், ஸ்டான்ஸ்டெட் மற்றும் பிரிஸ்டல் விமான நிலையங்களில் ஆயிரக்கணக்கான குடும்பங்கள் நீண்ட வரிசையில் காத்திருக்கும் சூழல் ஏற்பட்டது.