சீக்கியர் மீதான இனவெறி தாக்குதல்; அமெரிக்கா கண்டனம்!
அமெரிக்காவின் நியூயார்க் நகரில் இந்திய வம்சாவளியை சேர்ந்த சீக்கியர் ஒருவரை, அடையாளம் தெரியாத மர்ம நபர் ஒருவர் தாக்கபப்ட்டமைக்கு அமெரிக்கா கண்டனம் தெரிவித்துள்ளது.
நியூயார்க் ஜே.கே.எப். சர்வதேச விமான நிலையத்துக்கு வெளியே, தனது காருடன் நின்று கொண்டிருந்தபோதே தாக்குதலுக்கு உள்ளாகியிருந்தார். அந்த சீக்கியர் தலையில் அணிந்திருந்த ‘டர்பன்' எனும் தலைப்பாகையை தட்டிவிட்ட மர்ம நபர் சில வெடி பொருட்களையும் அவர் மீது வீசிய நிலையில் . இது இனவெறி தாக்குதலாக சந்தேகிக்கப்படுகிறது.
சம்பவம் தொடர்பான, வீடியோவை இந்திய வம்சாவளி பெண் ஒருவர் அண்மையில் டுவிட்டரில் பகிர்ந்த நிலையில் இந்த வீடியோ சமூக வலைத்தளத்தில் வைரலானதை தொடர்ந்து, சீக்கியர் மீதான தாக்குதலுக்கு கண்டனங்கள் வலுத்தன.
இதனிடையே நியூயார்க் நகரில் உள்ள இந்திய துணை தூதரகம், சீக்கியர் மீதான தாக்குதல் ஆழ்ந்த கவலைக்குரியது என்றும், இது குறித்து விசாரிக்குமாறும் அமெரிக்க வெளியுறவுத்துறையை வலியுறுத்தியது.
இந்த சம்பவம் தொடர்பாக அமெரிக்க வெளியுறவு அமைச்சகம் நேற்று அறிக்கை ஒன்றை வெளியிட்டது. அதில்,
ஜே.கே.எப். விமான நிலையத்தில் சீக்கிய கார் டிரைவர் மீது வெளிப்படையான தாக்குதல் நடத்தப்பட்டது தொடர்பான செய்திகளால் நாங்கள் மிகவும் கவலையடைந்துள்ளோம். எங்களின் பன்முகத்தன்மை அமெரிக்காவை வலிமையாக்குகிறது, மேலும் வெறுப்பு அடிப்படையிலான வன்முறையை நாங்கள் வன்மையாக கண்டிக்கிறோம்.
வெறுக்கத்தக்க குற்றங்களைச் செய்பவர்களை அவர்களின் செயல்களுக்குப் பொறுப்பாக்க வேண்டிய பொறுப்பு நம் அனைவருக்கும் உள்ளது எனவும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.