கருக்கலைப்பு விவகாரம்... 10 வயது சிறுமிக்கு ஏற்பட்ட சிக்கல்
அமெரிக்காவின் பெரும்பாலான மாகாணங்களில் கருக்கலைப்பு சட்டங்கள் அமுலுக்கு வந்ததை அடுத்து, ஓஹியோவில் உள்ள 10 வயது சிறுமியின் கருவை கலைக்க அங்குள்ள மருத்துவமனைகள் மறுப்பு தெரிவித்துள்ளன.
அமெரிக்காவில் பெண்களின் கருக்கலைப்பு தொடர்பில் 1973ம் ஆண்டு வழங்கப்பட்ட ரோ வி. வேட் வழக்கின் தீர்ப்பை கடந்த வாரம் அமெரிக்க உச்சநீதிமன்றம் திரும்ப பெற்றது.
இதனைத் தொடர்ந்து, அமெரிக்காவில் கிட்டத்தட்ட 40 மாகாணங்களில் கருக்கலைப்பு தொடர்பான தடை சட்டம் அமுலுக்கு கொண்டுவரப்பட்டது. இந்த நிலையில், அமெரிக்காவின் ஓஹியோ மாகாணத்தில் பலாத்காரத்திற்கு இலக்கான 10 வயது சிறுமி ஒருவர் 6 வாரம் 3 நாட்கள் கர்ப்பமாக இருந்துள்ளார்.
இதனையடுத்து கருவினை கலைப்பதற்காக குடும்பத்தினர் ஓஹியோ மருத்துவமனைக்கு சென்ற போது சிறுமியின் கருக்கலைப்பிற்கு மறுப்பு தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் அங்குள்ள குழந்தைகள் மருத்துவர், இண்டியானாவில் உள்ள மகப்பேறியல்-மகளிர் மருத்துவ நிபுணரான டாக்டர் கெய்ட்லின் பெர்னார்ட்டைத் தொடர்புகொண்டு நிலைமையை எடுத்து கூறியுள்ளார்.
இதனையடுத்து கருவை கலைப்பதற்காக இண்டியானா மாகாணத்திற்கு செல்லவேண்டிய நிலைமைக்கு அந்த 10 வயது சிறுமி தள்ளப்பட்டுள்ளார்.
ஆனால், இதே சூழலில் சிக்கியுள்ள பலர் இண்டியானா மாகாணத்திற்கு படையடுக்கும் நிலை ஏற்பட்டால், மாகாண நிர்வாகம் தடை விதிக்கலாம் என்ற அச்சமும் தற்போது எழுந்துள்ளதாக கூறப்படுகிறது.