கனடாவில் மது போதையினால் பொலிஸ் அதிகாரிக்கு ஏற்பட்ட நெருக்கடி
கனடாவில் மது போதையினால் பொலிஸ் அதிகாரி ஓருவர் பணியை இழக்க நேரிட்டுள்ளது.
பிரிட்டிஷ் கொலம்பியாவின் வில்லியம்ஸ் லேக் (Williams Lake) பிரிவில் பணியாற்றிய பொலிஸ் அதிகாரி ஒலாவோ காஸ்ட்ரோ, மது போதையில் வாகனம் செலுத்தியதாகவும், பொதுமக்களிடம் துப்பாக்கியை காட்டியதாகவும் குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
குற்றச்சாட்டுக்கள் நிரூபிக்கப்பட்டதால், தனது பதவியிலிருந்து விலகுமாறு காஸ்ட்ரோவிற்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
இந்த சம்பவம் 2022 ஜூலை 1 ஆம் திகதி அதிகாலை நேரத்தில் நடந்ததாக விசாரணை ஆணைக்குழு கண்டறிந்துள்ளது.
ஆணைக்குழு உறுப்பினர் கெவின் எல். ஹாரிசன் 2025 ஜூலை 22 அன்று தீர்ப்பை வழங்கியிருந்தாலும், அது சமீபத்தில் பொதுவாக வெளியிடப்பட்டது.
விசாரணை ஆவணங்களின்படி, காஸ்ட்ரோ தனது போர்ட் எப்.350 வாகனத்தை சாலையில் கட்டுப்பாடின்றி ஓட்டி, இரண்டு ஆண்கள் அருகே சென்றுள்ளார்.
பின்னர் அவர்களிடம் “ஏதாவது பிரச்சனை இருக்கிறதா?” எனக் கேட்டு தன் துப்பாக்கியை காண்பித்து மிரட்டியமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
அவரது வாகனத்தில் திறந்த பீர் கேன் ஒன்றும் இருந்ததாக பொலிஸார் தெரிவித்தனர். காஸ்ட்ரோ தாம் ஏழு பீர் குடித்ததாக ஒப்புக்கொண்டுள்ளார்.
விசாரணை ஆணைக்குழு தீர்ப்பில், “அவர் துப்பாக்கியை ஜாக்கெட்டிலிருந்து சில விநாடிகள் எடுத்துக்காட்டி, மீண்டும் மறைத்தார் — இது பொதுமக்களை அச்சுறுத்தும் செயல்,” என கூறப்பட்டுள்ளது.
காஸ்ட்ரோ கைது செய்யப்பட்டபோது மது சோதனையில் மது அருந்தியமை கண்டறியப்பட்டது.
இரண்டாவது சோதனையை மறுத்ததால், அவருக்கு 90 நாள் ஓட்டுநர் தடை விதிக்கப்பட்டது, மேலும் அவரது வாகனம் 30 நாட்களுக்கு பறிமுதல் செய்யப்பட்டது.