சிறுவனின் மரணம் தொடர்பில் சர்ச்சைக் கருத்து: மன்னிப்பு கோரிய பொலிஸார்
கனடாவில் 12 வயதுச் சிறுவன் ஒருவன் கடத்தப்பட்டுக் கொலை செய்யப்பட்ட சம்பவத்தில், அச்சிறுவனின் மரணத்திற்கு அவனும் ஒரு காரணமாக இருந்திருக்கலாம் என்ற தொனியில் வெளியிட்ட சர்ச்சைக்குரிய கருத்திற்காக அல்பர்ட்டா மாகாண ரோயல் கனேடிய மவுண்டட் பொலிஸார் பகிரங்க மன்னிப்புக் கோரியுள்ளனர்.
கடந்த ஓகஸ்ட் மாதம் கடத்தப்பட்டுப் படுகொலை செய்யப்பட்ட ஃபியாசல் ஹுசைன் என்ற சிறுவனின் மரணம் தொடர்பாக கடந்த ஒக்டோபர் மாதம் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போது பொலிஸ் அதிகாரி ஒருவர் வெளியிட்ட வார்த்தைப் பிரயோகத்திற்காகவே இந்த மன்னிப்புக் கோரப்பட்டுள்ளது.
குறித்த ஊடகவியலாளர் சந்திப்பில் குற்றவாளிகளின் செயலைக் கண்டித்துப் பேசிய அதிகாரி ஒருவர், "அவரது அகால மரணத்திற்கு எந்தவொரு சவால்கள் அல்லது தெரிவுகள் காரணமாக இருந்தாலும், அவர் எதிர்காலத்தைக் கொண்ட ஒரு சிறுவன்" எனக் குறிப்பிட்டிருந்தார்.

சிறுவனின் மரணத்திற்கு அவனது தெரிவுகளும் ஒரு காரணம் என்பது போன்ற தவறான அர்த்தத்தைத் தரும் வகையில் கருத்து வெளியிட்டதற்காக அல்பர்ட்டா பொலிஸ் கட்டளை அதிகாரி ட்ரெவர் டாரோக்ஸ் செவ்வாய்க்கிழமை வெளியிட்ட அறிக்கையில் வருத்தம் தெரிவித்துள்ளார்.
"அது உண்மையல்ல; ஃபியாசல் ஒரு பாதிக்கப்பட்ட சிறுவன், அவன் சுரண்டலுக்கு உள்ளாக்கப்பட்ட ஒரு குழந்தை. எங்களது வார்த்தைகள் அவனது குடும்பத்தினர், நண்பர்கள் மற்றும் சமூகத்திற்கு மேலும் மனவேதனையை ஏற்படுத்தியமைக்காக நாங்கள் வருந்துகிறோம்." சிறுவர்களின் பலவீனங்களை ஆயுதமாகப் பயன்படுத்தி குற்றவாளிகள் அவர்களைத் தமது வலையில் வீழ்த்திச் சுரண்டும் போக்கு உலகெங்கிலும் அதிகரித்து வருவதை இச்சம்பவம் வெளிச்சம் போட்டுக் காட்டுவதாக ட்ரெவர் டாரோக்ஸ் சுட்டிக்காட்டியுள்ளார்.
சிறுவர் சுரண்டல் என்பது இளமைக்காலத் தவறுகளோ அல்லது மோசமான தெரிவுகளோ அல்ல; மாறாக அது ஏமாற்றுதல், வற்புறுத்தல், மிரட்டல் மற்றும் வன்முறை ஆகியவற்றை உள்ளடக்கியது என அவர் விளக்கமளித்துள்ளார்.
தமக்கோ அல்லது தாம் நேசிப்பவர்களுக்கோ வன்முறை அல்லது பழிவாங்கல் ஏற்படும் என்ற அச்சத்தினால், அத்தகைய சூழலிலிருந்து வெளியேற முடியாமல் சிறுவர்கள் தனிமையில் சிக்கித் தவிக்கின்றனர்.
சுரண்டலுக்கு உள்ளாக்கப்படுவதனால், தம்மைச் சுரண்டுபவர்களின் செயல்களுக்கு அச்சிறுவர்கள் ஒருபோதும் பொறுப்பாக மாட்டார்கள் என்பதைச் சிறுவர்கள் புரிந்துகொள்ள வேண்டும் என பொலிஸார் வலியுறுத்தியுள்ளனர்.
இதேவேளை, 12 வயதுச் சிறுவன் ஃபியாசல் ஹுசைன் கடத்தப்பட்டுக் கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பாக இதுவரை மூன்று பேர் கைது செய்யப்பட்டு, அவர்கள் மீது ஆட்கடத்தல் மற்றும் திட்டமிட்ட கொலை ஆகிய குற்றச்சாட்டுகள் பதிவு செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.