ஒட்டாவாவில் கோர விபத்து: கடமை முடிந்து வீடு திரும்பிய மருத்துவ உதவியாளர் பலி
கனடாவின் ஒட்டாவா நகருக்குட்பட்ட கம்பர்லேண்ட் பகுதியில் உள்ள நெடுஞ்சாலை 174 இல் செவ்வாய்க்கிழமை அதிகாலை இடம்பெற்ற கோர வாகன விபத்தில் ஒட்டாவா மருத்துவ அவசர உதவிப் பிரிவைச் சேர்ந்த பெண் ஊழியர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
குவிக்லி ஹில் வீதிக்கு அருகே அதிகாலை 5:30 மணியளவில் எஸ்.யூ.வி ரக வாகனமும், சரக்குப் போக்குவரத்து லொறியும் நேருக்கு நேர் மோதிக்கொண்டதில் இந்த விபத்து ஏற்பட்டுள்ளது.
இந்த விபத்தில் எஸ்.யூ.வி வாகனத்தைச் செலுத்திச் சென்ற 30 வயது மதிக்கத்தக்க மெல் போர்த்விக் என்ற முதன்மைப் பராமரிப்பு மருத்துவ உதவியாளரே சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார்.

அதே வாகனத்தில் பயணித்த 30 வயது மதிக்கத்தக்க ஜெனி பிளமண்டன் என்ற மற்றொரு சிரேஷ்ட மருத்துவ உதவியாளர், உயிருக்கு ஆபத்தில்லாத காயங்களுடன் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.
இவர்கள் இருவரும் கடமை முடிந்து வீடு திரும்பிக்கொண்டிருந்த போதே இந்தத் துயரச் சம்பவம் நிகழ்ந்துள்ளது. சரக்கு லொறியின் சாரதிக்கு எவ்வித காயங்களும் ஏற்படவில்லை என ஒட்டாவா பொலிஸார் தெரிவித்துள்ளனர்.