ஆசிஃப் அலி ஜர்தாரி மீண்டும் பாகிஸ்தான் அதிபர் பதவிக்கு தேர்ச்சி
பாகிஸ்தானின் அடுத்த அதிபராக, மறைந்த முன்னாள் பிரதமர் பேநசீர் புட்டோவின் கணவரும், முன்னாள் வெளியுறவுத் துறை அமைச்சர் பிலாவல் புட்டோ ஜர்தாரியின் தந்தையுமான ஆசிஃப் அலி ஜர்தாரி சனிக்கிழமை அதிகாரபூர்வமாகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.
அந்த நாட்டு நாடாளுமன்றத்துக்கு கடந்த மாதம் 8-ஆம் திகதி நடைபெற்ற தேர்தலுக்குப் பிறகு முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரீஃபின் பாகிஸ்தான் முஸ்லிம் லீக் - நவாஸ் (பிஎம்எல்-என்) கட்சி ஆட்சியமைக்க பிலாவல் புட்டோ ஜர்தாரியின் பாகிஸ்தான் மக்கள் கட்சி (பிபிபி) ஆதரவு அளித்தது.
அதையடுத்து, நவாஸ் ஷெரீஃபின் சகோதரர் ஷாபாஸ் ஷெரீஃப் நாட்டின் பிரதமராக 2-ஆவது முறையாக மீண்டும் பொறுப்பேற்றார்.
இதற்கான பேச்சுவார்த்தையின்போது, அதிபர் தேர்தலில் ஆசிஃப் அலி ஜர்தாரிக்கு ஆதரவு அளிக்க பிஎம்எல்-என் கட்சி ஒப்புக்கொண்டது.
அதையடுத்து, சனிக்கிழமை நடைபெற்ற அதிபர் தேர்தலில் இரு கட்சிகளின் பொதுவேட்பாளராக போட்டியிட்ட ஜர்தாரி வெற்றிபெற்றார்.
ஏற்கெனவே, கடந்த 2008-லிருந்து 2013 வரை பாகிஸ்தானின் அதிபராக ஆசிஃப் அலி ஜர்தாரி பொறுப்பு வகித்துள்ளார்.