புதிய சாதனை படைத்த உலக சுகாதார அமைப்பு!
கடந்த 15ஆம் திகதி ருவாண்டாவுக்கு 11 லட்சம் கொரோனா தடுப்பூசிகள் வழங்கப்பட்டன. இதன் மூலம் இந்த தடுப்பூசிகளின் எண்ணிக்கை 100 கோடியை எட்டியுள்ளது.
கொரோனா வைரஸ் தொடங்கிய பிறகு பல ஏழை நாடுகள் அதற்கான கொரோனா தடுப்பூசி திட்டத்தை செயல்படுத்த முடியாத நிலை ஏற்பட்டது.
கொரோனா பரவிய நாடுகளுக்கு உதவும் வகையில் ஐக்கிய நாடுகள் சபை (United Nations) ‘கோவேக்ஸ்’ என்ற உலகளாவிய தடுப்பூசி திட்டத்தை கடந்த 2020-ம் ஆண்டு ஏப்ரல் மாதம் தொடங்கியது.
வளர்ந்த மற்றும் பணக்கார நாடுகள் இந்த திட்டத்தின் கீழ் நன்கொடையாக அளித்த கொரோனா தடுப்பூசிகளை ஏழை நாடுகளுக்கு உலக சுகாதார நிறுவனம் வழங்கி வருகிறது.
கொரோனா தடுப்பூசிகள் வினியோகத்தில் சமத்துவமின்மை நிலவுவதாக நீண்ட நாட்களாக குற்றம்சாட்டி வரும் உலக சுகாதார அமைப்பு, பிற நாடுகளும் கோவேக்ஸ் திட்டத்துக்கு முன்னுரிமை அளிக்க வேண்டும் என வலியுறுத்தி வருகிறது.
கடந்த 13ஆம் திகதி நிலவரப்படி 194 உறுப்பு நாடுகளில் 36 நாடுகள் 10 சதவீதத்துக்கு குறைவாகவும், 88 நாடுகள் 40 சதவீதத்துக்கு குறைவாகவும் கொரோனா தடுப்பூசி செலுத்தியுள்ளதாக உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது.
உலக சுகாதார அமைப்பின் இயக்குனர் டெட்ரோஸ் அதானோம் (Tedros Adhanom) கடந்த மாதம் கூறுகையில், ‘‘வருகிற ஜூலைக்குள் அனைத்து நாடுகளும் 70 சதவீதம் Covid-19 தடுப்பூசி செலுத்திக் கொள்வதாக இலக்கு நிர்ணயித்து புத்தாண்டு தீர்மானமாக எடுத்துக் கொள்ள வேண்டும்’’ என்றார்.
இந்நிலையில் ஐக்கிய நாடுகள் சபை மூலம் ஏழை நாடுகளுக்கு கொரோனா தடுப்பூசி வழங்கும் கோவேக்ஸ் திட்டத்தின் கீழ் இதுவரை 100 கோடி டோஸ் தடுப்பூசிகள் வழங்கி சாதனை படைத்துள்ளதாக உலக சுகாதார அமைப்பு (World Health Organization) தெரிவித்தது.