5 மில்லியன் மக்கள்... உச்சம் தொட்ட எண்ணிக்கை: திணறும் பிரித்தானியா
பிரித்தானியாவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை சாதனை அளவை எட்டியுள்ள நிலையில், கடந்த வாரத்தில் மட்டும் 13 பேரில் ஒருவருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.
மார்ச் 26ம் திகதியுடன் முடிவடைந்த வாரத்தில் சுமார் 4.9 மில்லியன் மக்கள் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளதாக மதிப்பிடப்பட்டுள்ளது,
இது முந்தைய வாரத்தில் 4.3 மில்லியனாக இருந்தது என்று தேசிய புள்ளியியல் அலுவலகம் வெள்ளிக்கிழமை தெரிவித்துள்ளது. மேலும், பிரித்தானியா முழுமையும் மருத்துவமனை நாடுவோர் மற்றும் மரண எண்ணிக்கைகள் அதிகரித்து வருவதாகவே தெரிய வந்துள்ளது.
மட்டுமின்றி, இலவச கொரோனா சோதனைகள் முன்னெடுப்பதை பிரித்தானிய அரசாங்கம் ரத்து செய்த பின்னரே, கொரோனா பரவல் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக கண்டறியப்பட்டுள்ளது.
பிரித்தானியாவை பொறுத்தமட்டில், 12 வயது மற்றும் அதற்கு மேற்பட்டவர்களில் 67% பேர் தங்கள் பூஸ்டர் அல்லது மூன்றாவது டோஸ் கொரோனா வைரஸ் தடுப்பூசியைப் பெற்றுக்கொண்டுள்ளனர்.
சனிக்கிழமை முதல் 5 முதல் 12 வயதுக்கு உட்பட்ட பிள்ளைகளுக்கு கொரோனா தடுப்பூசியை பெற்றோர்கள் பதிவு செய்து கொள்ளலாம் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.