கனடாவுக்கு வந்த ஒரே மாதத்தில் மகளை இழந்த அகதிகள் குடும்பம்
அகதிகள் குடும்பம் ஒன்று கனடாவுக்கு வந்து ஒரு மாதமே ஆன நிலையில் தங்கள் அன்பு மகளை இழந்துள்ள விடயம், அக்குடும்பத்தை சொல்லொணா சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.
மியான்மரில் இனப்படுகொலைக்குத் தப்பி பங்களாதேஷுக்கு ஓடிய ஆயுப் கான் குடும்பத்தை கனடாவுக்கு வர ஸ்பான்சர் செய்துள்ளார் அவரது சகோதரரான நாசிர் கான்.
நவம்பர் மாதம் 5ஆம் திகதி கனடா வந்தடைந்தது ஆயுப் கான் குடும்பம். ஆயுப் கான் தனது மகளான ஷோமிமாவை (9) பிரிட்டிஷ் கொலம்பியாவின் சர்ரேயிலுள்ள Newton Elementary School என்னும் பள்ளியில் சேர்த்திருந்தார்.

இந்நிலையில், இம்மாதம், அதாவது, டிசம்பர் மாதம் 5ஆம் திகதி, பள்ளியிலிருந்து வீடு திரும்பும்போது தன் தந்தையுடன் சாலையைக் கடந்துகொண்டிருந்த ஷோமிமா மீது வேன் ஒன்று மோதியுள்ளது.
வேன் மோதியதில் ஷோமிமா உயிரிழந்துவிட்டார். வேனின் சாரதியை பொலிசார் கைது செய்துள்ளார்கள்.
உயிருக்கு பயந்து சொந்த நாட்டிலிருந்து தப்பி இன்னொரு நாட்டில் அகதிகளாக வாழ்ந்து, அங்கிருந்து ஒரு நல்ல வாய்ப்புக் கிடைத்ததால் கனடாவுக்கு வந்து ஒரு புதிய வாழ்வைத் துவங்கலாம் என்ற சந்தோஷத்தில் இருந்த கான் குடும்பம், தற்போது, மகளை இழந்து சொல்லொணாத் துயரத்தில் ஆழ்ந்துள்ளது.