கனடா வரிவிதிப்பு தொடர்பில் ட்ரம்புக்கு எதிராக அவரது கட்சியினரே வாக்களிப்பு
ட்ரம்ப் அமெரிக்க ஜனாதிபதியானதுமே, சர்வாதிகாரி போல, பல்வேறு நாடுகள் மீது வரிகள் விதிப்பது முதலான நடவடிகைகளை தன்னிச்சையாக மேற்கொண்டுவருகிறார்.
இந்நிலையில், அவரது முடிவு ஒன்றுக்கு எதிராக, அவரது கட்சியினர் சிலரே வாக்களித்துள்ளார்கள்.
ட்ரம்ப் கனடா மீது கூடுதல் வரிகள் விதித்ததில், கனேடியர்களுக்கு மட்டுமின்றி, அமெரிக்கர்களில் பலருக்கும் உடன்பாடில்லை.

ட்ரம்பின் குடியரசுக் கட்சியைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினரான டான் பேக்கன் என்பவரே, கனேடிய பொருட்கள் மீது வரிவிதிப்பது, அமெரிக்க நுகர்வோர் மீது வரி விதிப்பதற்கு சமம் என விமர்சித்துள்ளார்.
இந்நிலையில், கனடாவிலிருந்து அமெரிக்காவுக்கு இறக்குமதி செய்யப்படும் பொருட்கள் மீது அமெரிக்கா கூடுதல் வரிகள் விதிப்பதற்கு எதிராக, நேற்று, அமெரிக்க நாடாளுமன்றத்தின் கீழவையில் வாக்கெடுப்பு நடத்தப்பட்டது.
இதற்கிடையில், தன் கட்சியைச் சேர்ந்த யாராவது கனேடிய வரி விதிப்புக்கு எதிராக வாக்களித்தால், அவர்கள் கடுமையான பின்விளைவுகளை சந்திப்பார்கள் என தனது சமூக ஊடகப் பக்கத்தில் மிரட்டல் விடுத்திருந்தார் ட்ரம்ப்.

ஆனால், ட்ரம்பின் மிரட்டலையும் மீறி, அவரது குடியரசுக் கட்சியைச் சேர்ந்த ஆறு நாடாளுமன்ற உறுப்பினர்கள் கனேடிய வரிவிதிப்புக்கு எதிராக வாக்களித்துள்ளார்கள்.
ஜனநாயகக் கட்சியினர் முன்வைத்த, கனேடிய வரிவிதிப்புக்கு எதிரான மசோதாவுக்கு ஆதரவாக 219 பேரும், எதிராக 211 பேரும் வாக்களிக்க, மசோதா வெற்றிபெற்றுள்ளது.
அதாவது, அமெரிக்க நாடாளுமன்றத்தின் கீழவை, கனடா மீது அமெரிக்கா கூடுதல் வரிகள் விதிக்கக்கூடாது என்கிறது. விடயம் என்னவென்றால், இனி இந்த மசோதா நாடாளுமன்றத்தின் மேலவையில் வாக்கெடுப்புக்கு விடப்படும்.
அங்கும் அது வெற்றி பெற்றாலும், கடைசியாக முடிவெடுக்கவேண்டியது, அதாவது, மசோதாவில் கையெழுத்திடவேண்டியது அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப்தான் என்பதால், நாடாளுமன்றத்தில் வெற்றிபெற்றாலும் கூட, இந்த மசோதா அமுல்படுத்தப்படுமா என்பது சந்தேகமே என்பது குறிப்பிடத்தக்கது.