இம்ரான் கானுக்கு உடனடி சிகிச்சை வழங்க வேண்டுகோள்
பாகிஸ்தான் சிறையில் அடைக்கப்பட்டுள்ள அந்நாட்டின் முன்னாள் பிரதமரும், 1992ஆம் ஆண்டு உலகக் கிண்ணத்தை வென்று கொடுத்த முன்னாள் கிரிக்கெட் அணித் தலைவருமான இம்ரான் கானின் உடல்நிலை கவலைக்கிடமாக உள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.
இந்தநிலையில், அவருக்கு முறையான மருத்துவ சிகிச்சையும் மனிதாபிமான அடிப்படையிலான பாதுகாப்பையும் உறுதி செய்யுமாறு 14 முன்னணி முன்னாள் கிரிக்கெட் வீரர்கள் பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப்பிடம் மனு அளித்துள்ளனர்.
அவுஸ்திரேலிய கிரிக்கெட் ஜாம்பவான் கிரெக் செப்பல் தலைமையில் சமர்ப்பிக்கப்பட்டுள்ள இந்த மனுவில், இந்திய கிரிக்கெட் நட்சத்திரங்களான சுனில் கவாஸ்கர், கபில் தேவ் மற்றும் சர்வதேச அளவில் புகழ்பெற்ற முன்னாள் அணித்தலைவர்கள் கையெழுத்திட்டுள்ளனர்.

அதன்படி, இந்தக் கூட்டு மனுவில் சுனில் கவாஸ்கர் (இந்தியா), கபில் தேவ் (இந்தியா), கிரெக் செப்பல் (அவுஸ்திரேலியா), இயன் செப்பல் (அவுஸ்திரேலியா), ஆலன் போடர் (அவுஸ்திரேலியா), ஸ்டீவ் வோக் (அவுஸ்திரேலியா), கிளைவ் லொய்ட் (மேற்கிந்தியத் தீவுகள்), ஜோன் ரைட் (நியூசிலாந்து), மைக்கல் அதேர்டன் (இங்கிலாந்து), நாசர் ஹுசைன் (இங்கிலாந்து), டேவிட் கோவர் (இங்கிலாந்து), மைக்கல் பிரியர்லி (இங்கிலாந்து), கிம் ஹியூஸ் (அவுஸ்திரேலியா) மற்றும் பெலிண்டா கிளார்க் (அவுஸ்திரேலியா - மகளிர் அணி) ஆகியோர் கையெழுத்திட்டுள்ளனர்.
இம்ரான் கானின் வலது கண்ணில் தற்போது 15 சதவீத பார்வை மட்டுமே எஞ்சியிருப்பதாக அவரது சட்டத்தரணிகள் பாகிஸ்தான் உயர் நீதிமன்றத்தில் அண்மையில் தெரிவித்தனர்.
சிறை அதிகாரிகளின் அலட்சியத்தால் அவருக்கு உரிய நேரத்தில் சிகிச்சை அளிக்கப்படவில்லை என்றும், இதனால் அவரது பார்வைத் திறன் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
இந்தநிலையில், கிரிக்கெட் உலகில் ஒரு ஜாம்பவானாகவும், பாகிஸ்தானுக்கு உலகக் கிண்ணத்தை வென்று கொடுத்த தலைவராகவும் இம்ரான் கான் திகழ்ந்தவர் என்பதை சுட்டிக்காட்டியுள்ள குறித்த முன்னாள் வீரர்கள், சர்வதேச தரத்திற்கு ஏற்ப அவருக்குத் தேவையான மருத்துவ வசதிகள் மற்றும் சட்டப்பூர்வமான உரிமைகளை வழங்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளனர்.
முன்னதாக, பாகிஸ்தானின் முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் வசீம் அக்ரமும், இம்ரான் கானுக்குச் சிறந்த மருத்துவ சிகிச்சை வழங்கப்பட வேண்டும் என சமூக வலைதளங்கள் வாயிலாக வேண்டுகோள் விடுத்திருந்தமை குறிப்பிடத்தக்கது.