கனடாவில் ரஷ்யக் கொடியை பறக்கவிட கோரிக்கை வைத்த தூதரகம்: கனடாவின் பதில்
ஏற்கனவே உக்ரைனை ரஷ்யா ஊடுருவியுள்ளதால் உலக நாடுகள் பல சரியான எரிச்சலில் இருக்கும் நேரத்தில், கனடாவில் ரஷ்யக் கொடியை பறக்க விட ஒரு கோரிக்கை முன்வைக்கப்பட்டுள்ள விடயம் வெறுப்பை ஏற்படுத்தியுள்ளது.
கனடா தலைநகர் Ottawaவில் அமைந்திருக்கும் ரஷ்ய தூதரகம், ஞாயிறன்று (ஜூன் 12), ரஷ்யா தினத்தை குறிக்கும் வகையில் ரஷ்யக் கொடியை பறக்கவிடவேண்டும் என்றும், City Hall என்று அழைக்கப்படும் அரசு அலுவலகத்தின் ஒரு பகுதியில் சிவப்பு, வெள்ளை மற்றும் நீல வண்ணத்தில் விளக்குகளால் அலங்கரிக்கவேண்டும் என்றும் கோரிக்கை ஒன்றை முன்வைத்துள்ளது.
இந்த கோரிக்கை, ரஷ்யா உக்ரைனை ஊடுருவுவதற்கு முந்தைய தினமான பிப்ரவரி 23ஆம் திகதி முன்வைக்கப்பட்டுள்ளது.
ஆனால், அடுத்த நாளே, அதாவது பிப்ரவரி 24 அன்று உக்ரைனை ரஷ்யா ஊடுருவ, உடனடியாக City Hallஇல் உக்ரைன் கொடியைப் பறக்கவிட உத்தரவிட்டுள்ளார் நகர மேயரான Jim Watson.
அத்துடன், ரஷ்யக் கொடியைப் பறக்கவிட ரஷ்ய தூதரகம் முன்வைத்த கோரிக்கையையும் உடனடியாக நிராகரிப்பதற்கான முறைப்படி நடவடிக்கைகளையும் துவக்குமாறும் சம்பந்தப்பட்ட அதிகாரிகளை உத்தரவிட்டுள்ளார் அவர்.
இப்படி ஒரு கோரிக்கையை முன்வைக்க அவர்களுக்கு என்ன தைரியம் என்று கூறியுள்ள நகர மேயரான Jim Watson, உக்ரைனை விட்டு வெளியேறும் வரை, எக்காரணம் கொண்டும் உங்கள் கொடி எங்கள் நாட்டில் பறக்கவிடப்படாது என்பது மட்டுமின்றி, நீங்கள் உக்ரைனை விட்டு வெளியேறும்வரை உக்ரைன் கொடிதான் எங்கள் நாட்டில் பறக்கும் என்றும் தான் ரஷ்ய தூதரக அதிகாரிகளிடம் கூறிவிட்டதாகவும் தெரிவிக்கிறார்.