வெனிசுலா நிலநடுக்கம்: 106 மணி நேர போராட்டத்திற்கு பின் இடிபாடுகளிலிருந்து வாலிபர் உயிருடன் மீட்பு!
வெனிசுலாவில் அண்மையில் நேரிட்ட சக்திவாய்ந்த இரட்டை நிலநடுக்கத்தைத் தொடர்ந்து, இடிபாடுகளுக்குள் சிக்கியிருந்த 21 வயது வாலிபர் ஒருவர், சுமார் 106 மணி நேரப் போராட்டத்திற்குப் பிறகு சர்வதேச மீட்புக் குழுவினரால் "அதிசயமாக" உயிருடன் மீட்கப்பட்டுள்ளார்.
வெனிசுலாவின் லா குவைரா மாகாணத்தில் உள்ள காராபல்லேடா நகரில், இடிந்து விழுந்த கட்டட இடிபாடுகளுக்கு இடையே ஆரோன் லெவி கான்டிலோ வார்காஸ் என்ற வாலிபர் உயிருடன் இருப்பது கண்டறியப்பட்டது.
இந்த மீட்பு நடவடிக்கை குறித்து எல் சால்வடார் நாட்டு அதிபர் நயிப் புகேலே தனது சமூக ஊடகப் பக்கத்தில் விபரித்துள்ளார். மீட்புப் படையினருக்கும், உயிருடன் தவித்துக் கொண்டிருந்த ஆரோனுக்கும் நடுவே துரதிர்ஷ்டவசமாக நிலநடுக்கத்தில் பலியான ஒருவரின் சடலம் குறுக்கே கிடந்தது.

இதனால் அவரைச் சென்றடைவதில் மீட்புக் குழுவினருக்குப் பெரும் சிக்கலும் தாமதமும் ஏற்பட்டது என தெரிவித்துள்ளார்.
எனினும், வெனிசுலா, மெக்சிகோ மற்றும் எல் சால்வடார் ஆகிய மூன்று நாடுகளின் மீட்புக் குழுவினர் ஒருங்கிணைந்து, சளைக்காமல் தொடர் முயற்சியில் ஈடுபட்டனர்.
வெனிசுலாவின் தற்காலிக அதிபர் டெல்சி ரோட்ரிக்ஸ் (Delcy Rodríguez) இந்த நெகிழ்ச்சியான மீட்புப் பணி குறித்துத் தெரிவிக்கையில், ஆரோன் இடிபாடுகளுக்குள் மொத்தம் 106 மணி நேரம் சிக்கியிருந்ததாகவும், அவரைப் பத்திரமாக வெளியே கொண்டு வர மீட்புக் குழுவினர் தொடர்ந்து 43 மணி நேரம் மிகக் கடுமையான மீட்புப் போராட்டத்தை நடத்த வேண்டியிருந்தது என்றும் குறிப்பிட்டுள்ளார்.
இடிபாடுகளுக்குள் இருக்கும்போதே மீட்புக் குழுவின் மருத்துவர் ஒருவர் அவருக்குத் தேவையான திரவ உணவுகளை (Fluids) வழங்கி, உடலில் நீர்ச்சத்து குறையாமல் பார்த்துக் கொண்டார். தற்போது மீட்கப்பட்டுள்ள 21 வயது ஆரோன், தீவிர கண்காணிப்பில் வைக்கப்பட்டு பிரத்யேக மருத்துவச் சிகிச்சைகளைப் பெற்று வருகிறார்.
இடிபாடுகளுக்குள் தவிப்பவர்களிடம் இருந்து இன்னும் பல உயிர்களைக் காப்பாற்ற முடியும் என்ற நம்பிக்கையோடு மீட்புக் குழுவினர் தொடர்ந்து களத்தில் பணியாற்றுவார்கள் என்று அதிபர் புகேலே மேலும் தெரிவித்துள்ளார்.