பிரான்ஸில் மீண்டும் கட்டுப்பாடுகளா? ஜனாதிபதி மக்ரோன் அதிரடி தீர்மானம்!
பிரான்ஸில் வைரஸ் தடுப்பு விதிமுறைகளை மீள நடைமுறைப்படுத்துவது பற்றிச் சிந்திக்குமாறு ஜனாதிபதி மக்ரோன் அரச உயர்மட்டத்தினரிடம் கேட்டிருக்கிறார்.
சீனா அதன் வைரஸ் ஒழிப்புக் கொள்கையைக் கைவிட்டிருப்பதை அடுத்து அங்கு திடீரெனத் தொற்றலை ஏற்பட்டுள்ளது.
சீன நிலைவரத்தைக் கவனத்தில் கொண்டு மக்களைப் பாதுகாப்பதற்காக பிரான்ஸிலும் ஐரோப்பிய மட்டத்திலும் முன்னெடுக்க வேண்டிய தடுப்பு நடவடிக்கைகள் பற்றிச் சிந்திக்குமாறு அரசிடம் மக்ரோன் கேட்டிருக்கிறார் என்ற தகவலை எலிஸே மாளிகை வெளியிட்டிருக்கிறது.
சீனா நாட்டுப் பயணிகள் மூலம் வைரஸ் பரவுவதைத் தடுப்பதற்கான நடவடிக்கைகளை ஐரோப்பிய நாடுகள் சில ஏற்கனவே முன்னெடுத்துள்ளன.
இத்தாலிக்கு⁰ வருகின்ற சீனப் பயணிகள் அனைவரும் வைரஸ் பரிசோதனைக்கு உட்படுத்தப்படவுள்ளனர். சீனப் பயணிகளை வைரஸ் சோதனைக்கு உட்படுத்துவது குறித்து அமெரிக்காவும் ஆலோசித்து வருகிறது.
சீன நிலைவரத்தை அடுத்து இந்திய அரசு அதன் மாநில நிர்வாகங்களை உஷார்ப்படுத்தி உள்ளது. மாஸ்க் அணிவது போன்ற சுகாதாரப் பழக்கவழக்கங்களைப் பின்பற்றுமாறு இந்திய மக்கள் அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
மேலும் சீனாவில் பரந்த அளவில் புதிதாகத் தோன்றியுள்ள வைரஸ் தொற்றலை காரணமாகக் கொரோனா வைரஸின் ஆபத்தான புதிய திரிபுகள் தோன்றக் கூடும் என்று வைரஸ் நோயியல் நிபுணர்கள் எச்சரித்துள்ளனர்.