எங்களுக்கு மட்டும் கட்டுப்பாடுகள் விதிப்பதா? கொந்தளிக்கும் சீனா
சீனத்து பயணிகளுக்கு மட்டும் புதிதாக கொரோனா பரிசோதனை முன்னெடுப்பது கண்டனத்துக்குரியது எனவும் எதிர் நடவடிக்கைகள் கட்டாயம் இருக்கும் எனவும் அந்த நாடு எச்சரித்துள்ளது.
சீனாவில் கொரோனா பரவல் நாளும் அதிகரித்து வரும் நிலையில், சுமார் பத்துக்கும் மேற்பட்ட நாடுகள், இத்தாலி, பிரான்ஸ், அமெரிக்கா, இந்தியா உட்பட, சீன பயணிகளுக்கு, அல்லது சீனாவில் இருந்து வரும் அனைவருக்கும் புதிதாக கொரோனா பரிசோதனை முன்னெடுக்கப்பட வேண்டும், அல்லது கொரோனா பாதிக்கப்படவில்லை என்பதற்கான சான்றுகளை சமர்ப்பிக்க வேண்டும் என சிறப்பு விதியை அமுலுக்கு கொண்டுவந்துள்ளன.
மட்டுமின்றி, சில நாடுகள் சீன பயணிகளை இலக்கு வைத்து தடையும் விதித்துள்ளன. இது ஏற்க முடியாத செயல் என தற்போது சீனா பதிலளித்துள்ளது. அறிவியல் அடிப்படையற்ற நடவடிக்கைகளுக்கு கண்டிப்பாக எதிர் நடவடிக்கைகள் இருக்கும் என்பதை கவனத்தில் வைத்திருங்கள் எனவும் சீனா தற்போது குறிப்பிட்டுள்ளது.
கடந்த மூன்றாண்டுகளாக கொரோனா தொடர்பில் கடுமையான கட்டுப்பாடுகளை அமுலில் வைத்திருந்த சீனா, பொதுமக்கள் எதிர்ப்பு காரணமாக அதில் தளர்வுகளை ஏற்படுத்தியதுடன், கடுமையான விதிகளை ரத்தும் செய்தது.
இந்த நிலையில் மருத்துவமனைகள் நோயாளிகளால் ஸ்தம்பித்துள்ளதுடன், தகன இல்லங்களும் சடலங்களால் நிரம்பி வருகிறது. மேலும், டிசம்பர் மாதம் சீன நிர்வாகம் முக்கிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டது.
அதில், சீனாவுக்கு வரும் பயணிகள் எவருக்கும் தனிமைப்படுத்துதல் தேவை இருக்காது என குறிப்பிட்டுள்ளது.
இது சீன மக்களுக்கு உற்சாகத்தை ஏற்படுத்தியதுடன், மூன்று ஆண்டுகளுக்கு பின்னர் முதன்முறையாக வெளிநாடுகளுக்கு செல்லவும் தீவிரம் காட்டினர்.
இந்த நிலையிலேயே, முக்கிய நாடுகள் பல சீன பயணிகளுக்கு கடுமையான விதிகளை விதித்துள்ளது.