30 ஆண்டுகளுக்கு முன்னர் சிறுவர்களைத் துஷ்பிரயோகம் செய்த நபர்!
கனடாவின் தென்மேற்கு ஒன்ராறியோவில் 30 ஆண்டுகளுக்கு முன்னர் மூன்று சிறுவர்களைப் பாலியல் துஷ்பிரயோகம் செய்ததாகக் குற்றம் சாட்டப்பட்ட 67 வயதான ரிச்சர்ட் நீல், தன் மீதான அனைத்துக் குற்றச்சாட்டுகளிலும் குற்றவாளி என ஜூரி சபையால் தீர்ப்பளிக்கப்பட்டுள்ளார்.
நீதிபதி ரோஸ்மேரி ஜுகனோவிக் வியாழக்கிழமை ஜூரி சபைக்கான தனது அறிவுறுத்தல்களை நிறைவு செய்த நிலையில், மறுநாள் காலை ஜூரி சபை இந்தத் தீர்ப்பை வழங்கியது.
கடத்தல், கொலை மிரட்டல் மற்றும் பல பாலியல் துஷ்பிரயோகக் குற்றச்சாட்டுகள் உட்பட மொத்தம் 17 குற்றச்சாட்டுகள் அவர் மீது சுமத்தப்பட்டிருந்தன.

ஐடில்வுட் பூங்காவில் நண்பர்களுடன் விளையாடிக் கொண்டிருந்த 8 வயதுச் சிறுவனுக்கு சைக்கிள்களைக் காட்டுவதாக ஆசை வார்த்தை கூறி காட்டுக்குள் அழைத்துச் சென்ற அடையாளம் தெரியாத நபர், அச்சிறுவனை மரத்தில் கட்டி வைத்துத் துஷ்பிரயோகம் செய்துள்ளார். நோர்டன் பிளேஸ் பூங்காவில் 10 வயதுச் சிறுவன் இதே பாணியில் பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உள்ளாக்கப்பட்டார்.
வைல்ட்வுட் பூங்காவில் 15 வயதுச் சிறுமி ஒருவர் சுமார் 5 மணிநேரம் பிடித்து வைக்கப்பட்டுக் கொடூரமாகத் துஷ்பிரயோகம் செய்யப்பட்டார்.
இந்த மூன்று சம்பவங்களும் பூங்காக்களில் நடந்ததோடு, சிறுவர்களை மஞ்சள் நிறக் கயிற்றால் மரத்தில் கட்டி வைத்து, சிறுநீர் அருந்துமாறு கட்டாயப்படுத்தித் துஷ்பிரயோகம் செய்த ஒரே பாணியிலான குற்றங்களாக அமைந்திருந்தன.
'புரொஜெக்ட் வுட்லண்ட்' என்ற பெயரில் பொலிஸார் நடத்திய தீவிர விசாரணையில் நூற்றுக்கணக்கானோர் விசாரிக்கப்பட்டதுடன், குற்றவாளியைப் பிடிக்க ரஷ்ய செயற்கைக்கோள் புகைப்படங்கள் வரை கோரப்பட்டன. 2009இல் மீண்டும் திறக்கப்பட்ட இவ்வழக்கில், 2024 மார்ச் மாதம் ரிச்சர்ட் நீல் கைது செய்யப்பட்டார்.
குற்றம் நடந்த மூன்று இடங்களிலும் சேகரிக்கப்பட்ட மரபணு மாதிரிகள் மற்றும் ஓக்வில் பூங்காவில் கண்டெடுக்கப்பட்ட கைரேகைகள் ரிச்சர்ட் நீலுடன் துல்லியமாகப் பொருந்தின.
மூன்று இடங்களிலும் கிடைத்த மரபணுக்கள் வேறொரு நபருடையதாக இருப்பதை விட, ரிச்சர்ட் நீலுடையதாக இருப்பதற்கு 20 குவாட்ரில்லியன் மடங்கு அதிக வாய்ப்புள்ளதாக தடயவியல் நிபுணர் மார்கரெட் ஹென்றி சாட்சியமளித்தார்.