அரசாங்கம் மீதான அதிருப்தி ;பிரான்ஸில் குவிக்கப்பட்ட 70,000 பொலிஸார்!
பிரான்ஸில் வாழ்க்கைச் செலவு, பொதுச் சேவைகள் மற்றும் ஜனாதிபதி இம்மானுவேல் மேக்ரோனின் அரசாங்கம் மீதான அதிருப்தியால் நாடு தழுவிய அளவில் போராட்டங்கள் நடைபெற்று வரும் நிலையில், சனிக்கிழமையன்று (31) மீண்டும் கலவரங்கள் வெடிக்கக்கூடும் என, 70,000 காவலர்களை களமிறக்கியுள்ளது.
கடந்த வார சம்பவங்களில் பிரான்ஸ் முழுவதும் உள்ள நகரங்களில் கடைகள், பொதுக் கட்டிடங்கள் மற்றும் வணிக நிறுவனங்கள் சேதமடைந்தன. இது போன்ற ஒரு சம்பவம் மீண்டும் நிகழ அனுமதிக்க மாட்டேன் என்று உள்துறை அமைச்சர் லொரன்ட் நூனெஸ் உறுதியளித்துள்ளார்.

பேரணிக்குத் தடை
பிரான்சின் உயரிய நிர்வாக நீதிமன்றம், பாரிஸின் அடையாளமிக்க இடங்களான ரிபப்ளிக் (Republique) மற்றும் பாஸ்டில் (Bastille) சதுக்கங்களுக்கு இடையே நடைபெறவிருந்த பேரணிக்குத் தடை விதித்துள்ளது.
தொழிற்சங்கங்கள் தாக்கல் செய்த மேல்முறையீட்டை நீதிமன்றம் நிராகரித்தது. இதற்குப் பதிலாக, பாரிஸின் மையப்பகுதியில் உள்ள முக்கிய வணிகப் பகுதிகளிலிருந்து தொலைவில், நகரின் கிழக்கு விளிம்பில் உள்ள அகலமான சாலைகளில் (boulevards) மட்டுமே போராட்டங்களை நடத்த அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
கலவரக்காரர்கள் தங்கள் அடையாளத்தை மறைக்க ஹாலோவீன் முகமூடிகளைப் பயன்படுத்தக்கூடும் என்ற சாத்தியக்கூறு குறித்தும் அதிகாரிகள் விழிப்புடன் உள்ளனர்.
பொது அமைதிக்கு அச்சுறுத்தல் ஏற்படும் சூழலில், முகத்தை மறைக்கும் பொருட்களைத் தடை செய்ய காவல்துறைக்குச் சட்டப்படி அதிகாரம் உள்ளது என்று நுனெஸ் குறிப்பிட்டார்.
பிரான்ஸ் முழுவதும் சுமார் 150 ஒன்றுகூடல்கள் திட்டமிடப்பட்டுள்ளதாக உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
செப்டம்பர் மாத இறுதியில், மேக்ரோனின் சிறுபான்மை அரசாங்கம் 2027-ஆம் ஆண்டுக்கான வரவுசெலவுத் திட்ட குறித்த பேச்சுவார்த்தைகளைத் தொடங்கியபோது, இந்தப் போராட்டங்கள் தீவிரமடைந்தமை குறிப்பிடத்தக்கது.