பிரதமர் ட்ரூடோவை கொல்ல திட்டமிட்ட இளம் கனேடிய நடிகர்: இன்னொரு கொலையில் சிக்கினார்
கனடாவின் பிரிட்டிஷ் கொலம்பியாவில் தனது தாயாரை துப்பாக்கியால் சுட்டு கொலை செய்த இளம் நடிகருக்கு ஆயுள் தண்டனை வழங்கி நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
மட்டுமின்றி, 14 ஆண்டுகளுக்கு பரோல் அனுமதியும் மறுக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. தொடர்புடைய சம்பவம் 2020 மார்ச் 31ம் திகதி நடந்துள்ளது.
24 வயதேயான Ryan Grantham என்ற இளம் நடிகர் தமது தாயார் மீது துப்பாக்கியால் சுட்ட விவகாரத்தில் அவர் மீது இரண்டாம் நிலை கொலை வழக்கு பதியப்பட்டது.
Riverdale என்ற தொலைக்காட்சி நாடகத்தில் நடித்திருந்தார் Ryan Grantham. சம்பவத்தின் போது அவர் கடுமையான மன உளைச்சல், தனிமை மற்றும் அளவுக்கதிகமான போதை மருந்து பயன்பாடு என பாதிக்கப்பட்டிருந்தார் என்றே தெரியவந்துள்ளது.
64 வயதான பார்பரா வெயிட் சம்பவத்தின் போது பியானோ வாசித்துக் கொண்டிருந்ததாகவும், அப்போது கிரந்தம் அவர் மீது துப்பாக்கியால் சுட்டதாக விசாரணையில் தெரிய வந்துள்ளது.
பின்னர் அவர் சில மெழுகுவர்த்திகளை ஏற்றி, பியானோவில் ஜெபமாலைகளை தொங்கவிட்டு, தங்கள் வீட்டை விட்டு வெளியேறும் முன் பிரார்த்தனை செய்தார் எனவும் கூறப்படுகிறது.
மேலும், SFU மற்றும் லயன்ஸ் கேட் பாலம் பகுதியில் பொதுமக்கள் மீது தாக்குதலை முன்னெடுக்கும் எண்ணமும் இவருக்கு இருந்ததாக விசாரணையில் அம்பலமானது.
மட்டுமின்றி, பிரதமர் ட்ரூடோவை கொல்ல வேண்டும் என கிரந்தம் உறுதியாக இருந்தார் எனவும் தெரியவந்துள்ளது.