அமெரிக்காவின் செயற்பாடுகள் குறித்து வெனிசுவேலாவின் இடைக்கால ஜனாதிபதி அதிருப்தி
வெனிசூலாவின் இடைக்கால ஜனாதிபதியாக செயல்பட்டு வரும் டெல்சி ரொட்ரிகஸ், அமெரிக்காவின் தலையீடுகள் குறித்து கடும் அதிருப்தியை வெளிப்படுத்தியுள்ளார்.
வாஷிங்டனின் உத்தரவுகள் இனி போதும் என அவர் வருத்தம் வெளியிட்டுள்ளார்.
வெனிசுவேலாவின் முன்னாள் தலைவர் நிக்கோலாஸ் மடூரோவை, அமெரிக்கா கைது செய்ததைத் தொடர்ந்து, நாட்டை ஒன்றிணைக்க முயற்சித்து வரும் நிலையில், ரொட்ரிகஸ் இந்தக் கருத்தை வெளியிட்டுள்ளார்.

அமெரிக்காவின் ஆதரவுடன் இடைக்கால தலைவராக பொறுப்பேற்றதிலிருந்து, மடூரோ ஆதரவாளர்களை நாட்டிற்குள் சமநிலைப்படுத்துவதும், அதே நேரத்தில் அமெரிக்க நிர்வாகத்தை திருப்திப்படுத்துவதும் என்ற சிக்கலான அரசியல் சமநிலையை ரொட்ரிகஸ் மேற்கொண்டு வந்ததாக கூறப்படுகிறது.
இந்நிலையில், புதிய பொறுப்பை ஏற்று சுமார் ஒரு மாதம் ஆகும் நிலையில், எண்ணெய் உற்பத்தியை மீண்டும் தொடங்க வேண்டும் உள்ளிட்ட அமெரிக்காவின் தொடர்ச்சியான அழுத்தங்கள் மற்றும் கோரிக்கைகளுக்கு எதிராக அவர் வெளிப்படையாகக் குரல் எழுப்பியுள்ளார்.
வெனிசுவேலா அரசியல்வாதிகளின் மீது வாஷிங்டன் விதிக்கும் உத்தரவுகள் போதும். இனி இது தொடரக்கூடாது,” என்று தெரிவித்தார்.
எங்கள் உள்நாட்டு கருத்து வேறுபாடுகளையும் முரண்பாடுகளையும் வெனிசூலா அரசியலே தீர்க்கட்டும். இந்த குடியரசு, எங்கள் நாட்டில் தோன்றிய அதிதீவிரவாதம் மற்றும் ஃபாசிசத்தின் விளைவுகளை எதிர்கொண்டதற்காக மிகப் பெரிய விலையை செலுத்தியுள்ளது என தெரிவித்துள்ளார்.